உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்களை கிண்டல் செய்யும் குடிமகன்கள் காவல் நிலையம் அருகிலேயே அட்டகாசம்

பெண்களை கிண்டல் செய்யும் குடிமகன்கள் காவல் நிலையம் அருகிலேயே அட்டகாசம்

தண்டையார்பேட்டை:தண்டையார்பேட்டையில், பொதுமக்கள் அதிக அளவில் நடமாடும் இரு தெருக்களை, திறந்தவெளி மதுக்கூடமாக மாற்றிய குடிமகன்கள், அவ்வழியே செல்லும் பள்ளி மாணவியர், பெண்களை கிண்டல் செய்வதால், அவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், அகஸ்தியா குடியிருப்பு எதிரேயும், எம்.எம்.தியேட்டர் எதிரேயும் என, இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.இந்த கடைகளில் மதுவாங்கும் குடிமகன்கள், அருகில் உள்ள கேசவன் தெரு மற்றும் தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகிலுள்ள இடத்தில் வைத்து குடிக்கின்றனர். மதிய நேரத்தில் குடிமகன்கள் அதிக அளவில் இப்பகுதியில் கூடுவதால், அந்த வழியாக செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர். அத்துடன், அவ்வழியாகச் செல்லும் பெண்களை, சைகை காட்டி அழைத்து, குடிமகன்கள் கிண்டல் செய்கின்றனர். குறிப்பாக, டாஸ்மாக் கடை அருகே உள்ள கேசவன் தெருவில் மருத்துவமனை, உணவுக்கூடங்கள், உடற்பயிற்சிக்கூடம் உள்ளிட்டவை உள்ள நிலையில், அந்த தெருவே குடிமகன்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. மற்றொரு கடை உள்ள அகஸ்தியா குடியிருப்பு எதிரில் ஐந்து பள்ளிகள், தண்டையார்பேட்டை மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் உள்ளன.இதனால், அப்பகுதியில் வசிப்போர் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். இப்பகுதியில், அதிக அளவில் பள்ளிகள் உள்ள நிலையில், பள்ளிக்கு சென்று திரும்பும் மாணவியரையும் கிண்டல் செய்து அச்சுறுத்துகின்றனர். கேசவன் தெருவில், திறந்தவெளியில் மது அருந்திவிட்டு, அவர்களுக்குள் மோதிக் கொள்வதுடன், போதை தலைக்கேறி சாலையில் அரைகுறை ஆடையுடன் கிடக்கின்றனர். இவ்விரு தெருக்களுக்கு அருகே தண்டையார்பேட்டை காவல் நிலையம் இருந்தும், குடிமகன்களை போலீசார் கண்டுகொள்வது இல்லை. இதனால், நாளுக்கு நாள் குடிமகன்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.எனவே, பள்ளி மாணவியர், பெண்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதால், இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை, உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறியதாவது:இப்பகுதியிலுள்ள பள்ளி, கல்லுாரி, வங்கிகளுக்கு செல்ல, இவ்விரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ள தெருக்கள் வழியாகவே செல்ல முடியும். குடிமகன்கள் தெருவையே ஆக்கிரமித்து கும்பல் கும்பலாக மது அருந்துகின்றனர். பெண் குழந்தைகளை தனியே அனுப்ப அச்சமாக உள்ளது. இப்பகுதிக்கு சம்பந்தமில்லாத பலர் இங்கு மது அருந்திவிட்டு, அட்டகாசம் செய்கின்றனர். பள்ளி முடித்து வரும் பெண் குழந்தைகளை குடிமகன்கள் கிண்டல் செய்கின்றனர். இதனால், தனியே அனுப்ப அச்சமாக உள்ளது. தண்டையார்பேட்டை காவல் நிலையம் அருகில் இருந்தும், இவர்களை கண்டுகொள்வது இல்லை. இப்பகுதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி