சென்னை, அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்தை குறைத்து, கோயம்பேடு சந்தையில் கூடுதல் விலையில், காய்கறிகள் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலவகை காய்கறிகள் விளைகிறது. ஆனால், மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, உற்பத்தி இல்லை. எனவே, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் தேவைக்கு ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து பலவகை காய்கறிகள் வரவழைக்கப்படுகின்றன. சென்னை, பாரிமுனையில் காய்கறிகள் மார்க்கெட் இயங்கும் காலத்தில் இருந்தே, காய்கறிகள் அனுப்புவதை கர்நாடகா, ஆந்திரா விவசாயிகள் வழக்கமாக வைத்துள்ளனர். கோடை காலத்தில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் காய்கறிகள் வரத்து குறைந்தது. இதனால், அவற்றின் விலை அதிகரித்தது. ஒரு கிலோ பீன்ஸ் 200, முருங்கைக்காய் 150, கேரட், பீட்ரூட், அவரைக்காய் உள்ளிட்டவை கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இதனால், நுகர்வோர் அதிர்ச்சியில் உறைந்தனர். பலரும் காய்கறிகள் பயன்பாட்டை குறைத்துக் கொண்டனர்.அண்டை மாநிலங்களில் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் காய்கறிகள் அறுவடை துவங்கியுள்ளது. இதனால், கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்தாண்டு, இதே மாதம் 400க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறி வரத்து இருந்தது. ஆனால், தற்போது 300 லாரிகளில் மட்டுமே வரத்து உள்ளது. கமிஷன் ஏஜன்ட்கள் வாயிலாக, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, விவசாயிகள் காய்கறிகளை அனுப்புகின்றனர். காய்கறிகளை விற்பனை செய்து, அதற்கான பணம், விவசாயிகளுக்கு வழங்கப்படும். கோயம்பேடில், பல வியாபாரிகள் கமிஷன் ஏஜன்ட்களாக உள்ளனர்.அண்டை மாநிலங்களில் இருந்து வரவேண்டிய காய்கறிகள் வரத்தை குறைத்து, செயற்கை தட்டுப்பாட்டை இவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், பலவகை காய்கறிகளுக்கு தட்டுப்பாடு தொடர்ந்து, அதன் விலை உச்சத்தில் உள்ளது. இவர்களிடம் காய்கறிகளை வாங்கி செல்லும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வியாபாரிகள், வாகன வாடகை, மூட்டை இறக்கும் கூலி ஆகியவற்றை கணக்கிட்டு, கூடுதல் விலையில் அவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இதனால், பலவகை காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்தும், விலை தொடர்ந்து உச்சத்திலேயே உள்ளதாக நுகர்வோர் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காய்கறிகள் விலை நிலவரம்
காய்கறி(கிலோ) சேலம் தலைவாசல் கோயம்பேடு(ரூபாய்)வெங்காயம் 45 38சின்னவெங்காயம் 45 70தக்காளி 25 40உருளைக்கிழங்கு 45 50பச்சைமிளகாய் 50 90கத்தரிக்காய் 60 65வெண்டைக்காய் 25 40முருங்கைக்காய் 90 140பீர்க்கங்காய் 50 60சுரக்காய் 5 35புடலங்காய் 30 45முள்ளங்கி 30 35பீன்ஸ் 70 140அவரைக்காய் 100 140பாகற்காய் 70 45கோஸ் 20 60பீட்ரூட் 40 70கேரட் 50 90சவ்சவ் 30 35கொத்துமல்லி கட்டு 20 10புதினா கட்டு 10 10