உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒக்கியம்மடுவில் மண் கொட்டியதால் நீரோட்டம் தடைபட வாய்ப்பு

ஒக்கியம்மடுவில் மண் கொட்டியதால் நீரோட்டம் தடைபட வாய்ப்பு

சென்னை, தென்சென்னை புறநகர் பகுதியிலுள்ள 62 ஏரிகள், 100க்கும் மேற்பட்ட குளங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர், 400 அடி அகல ஒக்கியம்மடு வழியாக, பகிங்ஹாம் கால்வாயை அடைந்து, முட்டுக்காடு கடலில் கலக்க வேண்டும்.ஒக்கியம்மடு, துரைப்பாக்கம் அருகே, ஓ.எம்.ஆர்., குறுக்கே செல்கிறது. தற்போது, ஒக்கியம்மடு, 250 அடி அகலத்தில் உள்ளது. 'மிக்ஜாம்' புயல் மழையில், ஒக்கியம்மடுவில் ஆகாயத்தாமரை சேர்ந்து, நீரோட்டம் தடைபட்டு வேளச்சேரி, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகள், கடுமையாக பாதிக்கப்பட்டன.அப்போது அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஒக்கியம்மடுவை ஆய்வு செய்தனர். பின், அதை விரிவாக்கம் செய்தால் மட்டுமே, வெள்ள பாதிப்பை தடுக்க முடியும் எனக் கூறினர். தற்போது விரிவாக்கத்திற்கான பணி நடந்து வருகிறது. ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணிக்காக சாலை மைய பகுதியில், துாண்கள் அமைக்கப்படுகின்றன.ஒக்கியம்மடுவில் சாலை மைய பகுதியில் துாண்கள் அமைக்க முடியாததால், கால்வாய்க்குள் அமைக்கப்பட உள்ளது.அதுவும், 'ப' வடிவில் துாண்கள் அமைத்து ரயில் பாதை அமைப்பதால், கால்வாயில் கிழக்கு மற்றும் மேற்கு திசையில், மண் கொட்டி நிரப்பி பணி நடைபெற உள்ளது.முதற்கட்டமாக, மேற்கு திசையில், 100 அடியை திறந்து விட்டு, 150 அடி அகலத்தில் மண் கொட்டி நிரப்பப்படுகிறது. கனமழை பெய்தால் கால்வாயில் வெள்ளம் அதிகரித்து, மண் அரிப்பு ஏற்படும். மண் கொட்டியதால் தேங்கி நிற்கும் நீர்ப்பிடிப்பில் ஆகாய தாமரை அதிகமாக வளர்ந்துள்ளதால், நீரோட்டம் தடைபடும்.இதனால் துரைப்பாக்கம், காரப்பாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.இதுகுறித்து, துரைப்பாக்கம் பகுதி நலச்சங்கங்கள் கூறியதாவது:தென்சென்னை மற்றும் புறநகரில் வடியும் மொத்த மழைநீரும், ஒக்கியம்மடு வழியாகத் தான் செல்ல வேண்டும். இதனால், நீரோட்டம் சீராக இருக்க வேண்டும். மெட்ரோ ரயில் பணிக்காக மடுவில் மண் கொட்டி நிரப்பியதால், நீரோட்டம் தடைபட வாய்ப்புள்ளது.நான்கு துாண்கள் அமைக்கும் பணியை, ஜன., மாதம் துவங்கி இருந்தால், பருவமழைக்கு முன் முடித்திருக்க முடியும். தற்போது பணி துவங்கியதால், பருவமழையில் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை உணர்ந்து பணி செய்ய வேண்டும்.இவ்வாறு கூறினர்.இதுகுறித்து, மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்ட போது,'மடுவின் கீழ் பகுதியில், பூமிக்குள் 60 அடி ஆழத்தில் அடித்தளம் போடப்படும். இதற்காக மண் கொட்டி உள்ளோம். இதனால், நீரோட்டம் தடைபட வாய்ப்பில்லை. அதிக அளவில் வெள்ளம் வந்தால், மாற்று ஏற்பாடு செய்யப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி