UPDATED : மார் 22, 2024 12:11 PM |  ADDED : மார் 22, 2024 12:11 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
சென்னை, சென்னையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல்., போட்டிக்கான டிக்கெட்டுகளை வைத்துள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எம்.டி.சி., பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என, சி.எஸ்.கே., நிர்வாகம் தெரிவித்துள்ளது. போட்டி துவங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பிருந்தே, 'ஏசி' அல்லாத பேருந்துகளில் பயணிக்கலாம்.சென்னையில், இன்றும், 26ம் தேதியும் நடக்கும் போட்டிகளுக்கு வரும் ரசிகர்களின் பயணத்தை எளிதாக்கும் நோக்கத்தில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.  சிறப்பு ரயில்கள் 
சென்னை சேப்பாக்கத்தில் 17வது ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று துவங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணியும் மோதுகின்றன.இதையடுத்து, மற்றொரு போட்டி, வரும் 26ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் முடிந்தபின் பயணிகள் திரும்பி செல்லும் வசதிக்காக, வேளச்சேரி ---- சிந்தாதிரிப்பேட்டை இடையே இன்றும், 26ம் தேதியும் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வேளச்சேரியில் இருந்து இரவு 10:40க்கும், 11:05 மணிக்கும் சிந்தாதிரிப்பேட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இரவு 11:20 மணிக்கும், இரவு 11:45 மணிக்கும் வேளச்சேரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.