புழுதிவாக்கம், சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட மடுவின்கரை, ஆதம்பாக்கம், நங்கநல்லுார் மற்றும் பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட புழுதிவாக்கம், உள்ளகரம் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், அந்தந்த பகுதியில் உள்ள கால்வாய் வழியாக, வீராங்கல் ஓடையில் கலக்கிறது.பின்னர், வீராங்கல் ஓடை வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சென்று, அங்கிருந்து ஒக்கியம்மேடு வழியாக கடலில் கலக்கிறது. மழைக்காலங்களில் மேற்கண்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க, வீராங்கல் ஓடையை முழு வீச்சில் தயாராக வைத்திருப்பது அவசியம்.இது குறித்து சமூக ஆர்வலர் கோபிநாத், 74, கூறியதாவது:வீராங்கல் ஓடையில் வடக்கு, தெற்கு என இரு பிரிவுகள் உள்ளன. இதில், வடக்கு பக்கம் உள்ள ஓடை கடந்த வாரம் துார்வாரப்பட்டது.அப்போது, ஓடையில் இருந்து அகற்றப்பட்ட சகதி, மண், கற்கள் உள்ளிட்ட கழிவுகள், ஓடை ஓரமாக குவிக்கப்பட்டன.ஆனால், வடக்கு பக்க ஓடையில் தடுப்பு சுவர் இல்லை. இதனால், அகற்றப்பட்ட கழிவுகள் மீண்டும் ஓடைக்குள் சரிந்து விழத் துவங்கி உள்ளன. குறிப்பாக, புழுதிவாக்கம், பாலாஜி நகர் 17வது தெரு வழியாகச் செல்லும் 100 மீ., நீளமுள்ள வீராங்கல் ஓடை வழித்தடத்தில், தடுப்பு சுவர் கட்டுவது மிக அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்