உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மருத்துவமனை சாலை மெகா பள்ளம் 10 மாதங்களுக்குப் பின் சீரமைப்பு

மருத்துவமனை சாலை மெகா பள்ளம் 10 மாதங்களுக்குப் பின் சீரமைப்பு

சின்னப்போரூர், சின்ன போரூர் மருத்துவமனை சாலையில் ஏற்பட்ட 'மெகா' பள்ளம், 10 மாதங்கள் போராட்டத்திற்குப் பின் சீர் செய்யப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு சாலை திறக்கப்பட்டுள்ளது.சென்னை, வளசரவாக்கம் மண்டலம், மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட மண்டலம் என்பதால், பல வார்டுகளில் அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை ஆகியவை இன்னும் முழுமை பெறவில்லை. இதில், போரூர் 151வது வார்டில், பாதாள சாக்கடை பணிகள் முடிந்து, சமீபத்தில் பயன்பாட்டிற்கு வந்தது. இங்கு, சின்னப்போரூர் மருத்துவமனை சாலையில், கடந்த ஆண்டு பாதாள சாக்கடை மேல் மூடி அருகே, சாலை உள்வாங்கியது.இதையடுத்து, அப்பகுதியில் மண் கொட்டப்பட்டு சீர்செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலையில், அப்பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு, மண் சரிந்து பள்ளம் ஏற்பட்டது.அத்துடன், அதே பகுதியில் உள்ள குடிநீர் குழாயும் சேதமடைந்தது. இதனால், சாலை நடுவே மெகா பள்ளம் ஏற்பட்டது. சம்பவ இடத்தை ஆய்வு செய்த குடிநீர் வாரிய அதிகாரிகள், குடிநீர் குழாயை சீர் செய்தனர்.பின், சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்ய, சுற்றி தடுப்புகள் அமைத்து பணி மேற்கொண்டனர். இச்சாலையில் இருந்து, 25 அடி ஆழத்தில் பாதாள சாக்கடை குழாய் செல்கிறது. மேலும், சீரமைப்பு பணிக்காக பள்ளம் தோண்டியபோது, 2 அடி ஆழத்தில் நிலத்தடி நீர் வருவதால், கடந்த ஆண்டு மழைக்காலத்தில் பணிகளை தொடர முடியவில்லை.இதன் காரணமாக 9 மாதங்கள் கடந்தும், பள்ளம் முறையாக சரிசெய்யப்படாமல் இருந்தது. இதனால், இச்சாலை மூடப்பட்டது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. தற்போது, பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு, 10 மாதங்களுக்குப் பின், சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீர் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சாலையும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை