சென்னை, சென்னையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 1.20 லட்சம் வீடுகள் உள்ளன. குடியிருப்புகளின் பராமரிப்பு மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, 2021ம் ஆண்டு, 'நம் குடியிருப்பு; நம் பொறுப்பு' என்ற திட்டத்தை அரசு துவக்கியது.இதில், 'பிளாக்' வாரியாக நலச்சங்கம் துவக்கி, பராமரிப்பு கட்டணத்தை மக்களே வசூலித்து பராமரிக்க வேண்டும். வசூலிக்கும் பணத்திற்கு ஈடாக, ஒரு தொகையை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வழங்கும்.பெரும்பாக்கம் குடியிருப்பில், 185 பிளாக்கில், 25,000 வீடுகள் உள்ளன. இதில், 80க்கும் மேற்பட்ட பிளாக்குகளில் நலச்சங்கங்கள் துவக்கப்பட்டு உள்ளன.இதில், சில சங்கங்கள், மக்களிடம் வசூலிக்கும் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியது. சமுதாய வளர்ச்சி பிரிவு நடத்திய 'ஆடிட்' வாயிலாக தெரியவந்துள்ளது.மேலும், ஒரு சங்கத்தில், 2023ல் அக்டோபர் முதல் டிசம்பர் வரை இருந்த ஒரு நிர்வாகி, சங்கத்தில் உள்ளவர்களுக்கு தெரியாமல், சட்டவிரோதமாக இரண்டாவது வங்கி கணக்கு துவக்கியுள்ளார்.இதனால், சங்க உறுப்பினர்கள், அவரை நிர்வாகத்தில் இருந்து நீக்கினர். அவரிடம் விசாரித்தபோது, சமுதாய வளர்ச்சி பிரிவு அலுவலர்கள் ஆலோசனையின்படி, வங்கி கணக்கு துவக்கியதாக கூறினார்.இச்சம்பவம், அப்பிரிவு அலுவலர்களுக்கு தெரிந்த பின்னும், வங்கி கணக்கை முடக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அலுவலர்கள் மீது சந்தேகம் அதிகரித்தது. இது அரசுக்கும், வாரியத்திற்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தியது.பின், வாரிய நிர்வாக பொறியாளருக்கு, வங்கி கணக்கு துவக்கியது தெரிந்தது. இதையடுத்து, கடந்த 5ம் தேதி சட்டவிரோதமாக துவக்கிய வங்கி கணக்கு, வாரிய அதிகாரிகளால் முடக்கப்பட்டது.சமுதாய வளர்ச்சி பிரிவு அதிகாரி கூறியதாவது:ஒரு வங்கி கணக்கு இருக்கும் போது மற்றொரு வங்கி கணக்கு துவக்கியது சட்டவிரோதமான செயல். வாரிய அதிகாரிகள் விசாரணைக்கு பின் தான் எங்களுக்கே தெரியவந்தது.எங்கள் பிரிவைச் சேர்ந்த அலுவலர்களுக்கு தெரிந்தும், வங்கி கணக்கை முடக்க நடவடிக்கை எடுக்காதது குறித்து விசாரிக்க உள்ளோம். இனிமேல், இதுபோன்ற தவறு நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.