உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவடியில் திருமண மண்டபம், மேம்பாலம், ஆடுதொட்டி கட்டி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத அவலம்

ஆவடியில் திருமண மண்டபம், மேம்பாலம், ஆடுதொட்டி கட்டி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத அவலம்

ஆவடி, ஆவடி தொகுதியில், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் 68 கோடி ரூபாயில் கட்டப்பட்ட திருமண மண்டபம், அண்ணனுார் மேம்பாலம், ஆடு தொட்டி மற்றும் குடிநீர் தொட்டி உள்ளிட்ட மக்கள் நலத்திட்ட பணிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில்,குறைந்த கட்டணத்தில் 'அம்மா திருமண மண்டபம்' கட்டும் திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி, ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், 2019ல், 15 கோடி ரூபாயில், 29,497 சதுர அடி பரப்பளவில் அம்மா திருமண மண்டபம்கட்டப்பட்டது.முதல் தளத்தில், நவீன சமையலறை வசதியுடன், 300 பேர் உணவருந்தும் இடம் வசதி உள்ளது. இரண்டாவது தளத்தில், குளிர்சாதன வசதியுடன் 650 பேர் அமரும் வகையில் விழா மண்டபம், மணமகன், மணமகள் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.மூன்றாவது தளத்தில், விருந்தினர் தங்கும் அறை, கழிப்பறை வசதிகளுடன் கூடிய ஓய்வறைகள் உள்ளன. தனியார் மண்டபங்களுக்கு இணையாக 'சிசிடிவி' கேமரா உட்பட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மண்டபம் கட்டி ஐந்து ஆண்டுகள் ஆகியும், அதை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் பூட்டி கிடக்கிறது. பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மண்டபம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, தற்காலிகமாக தங்க வைக்கும் இடமாக மண்டபம் மாறி வருகிறது.

அண்ணனுார் மேம்பாலம்

ஆவடி அடுத்த அண்ணனுார் சுற்றுவட்டார பகுதியினர் அயப்பாக்கம், திருவேற்காடு, அம்பத்துார், ஆவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர அண்ணனுார் ரயில்வே கேட்டை பயன்படுத்தி வந்தனர். ரயில்வே கேட் அடிக்கடி மூடுவதால், தண்டவாளத்தை கடந்து சென்று விபத்தில் சிக்கினர். இதனால், அங்கு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கடந்த 2010ல், 15.6 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கின. ஆனால், பல்வேறு காரணங்களால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. பின், திட்டத்தை மறுமதிப்பீடு செய்து, 52 கோடி ரூபாயில் 2020ல் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. மேம்பாலம் கட்டி இரண்டு ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படவில்லை. இதையடுத்து, 2022ல், ஆயுத பூஜை தினத்தன்று, பெண் சமூக ஆர்வலர் ஒருவர், கற்பூர ஆரத்தி காட்டி, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ஆனால், அதிகாரபூர்வமாக மேம்பாலம் திறக்கப்படாததால், மேம்பாலம் வழியாக பொது போக்குவரத்து இயக்கப்படுவதில்லை. இதனால், அயப்பாக்கம்,திருவேற்காடு, அண்ணனுார் பகுதிவாசிகள் ஆவடிக்கு செல்ல தனியார் போக்குவரத்தை நம்பி உள்ளனர்.

ஆடு அடிக்கும் தொட்டி

ஆவடி அடுத்த திருநின்றவூரில் 100க்கும் மேற்பட்ட ஆட்டு இறைச்சி கடைகள் உள்ளன. அவர்கள் ஆடு சுத்தம் செய்து, கழிவுகளை சாலையோரத்தில் கொட்டி வந்தனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதை தடுக்கும் பொருட்டு, திருநின்றவூர், கன்னிகாபுரத்தில், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் 2012 --- 13ல் 20 லட்சம் ரூபாயில் ஆடு அடிக்கும் தொட்டி கட்டப்பட்டது. தொடர்ந்து, 10 லட்சம் மதிப்பில் நவீன இயந்திரங்களும் வாங்கப்பட்டன.ஆனால், 11 ஆண்டுகள் ஆகியும் ஆடு அடிக்கும் தொட்டி இன்று வரை திறக்கப்படவில்லை. இந்த இடம் சமூக விரோதிகளின் புகலிடமாகவும், மதுக்கூடமாகவும் மாறியுள்ளது.

குடிநீர் தொட்டி

ஆவடி அடுத்த நெமிலிச்சேரி ஊராட்சியில், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் இரண்டு கீழ்நிலை குடிநீர் தொட்டிகள் கட்ட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ஊராட்சி ஒன்றிய பொது நிதியில், 11 லட்சம் ரூபாயில், நெமிலிச்சேரி தேவி நகர் மற்றும் ரயில் நகரில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டன. 30,000 லிட்டர் கொள்ளளவில் கட்டப்பட்ட இரண்டு தொட்டிகளும் பயன்படுத்தப்படாமல் உள்ளன. நிதி நெருக்கடி பிரச்னையால், மோட்டார் இணைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதே, இதற்கு காரணம்.முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் என்பதற்காகவே, இவை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மக்கள் நலத்திட்ட பணிகளில், தி.மு.க., அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காட்டுகிறது. இதனால், மக்கள் வரிப்பணம் வீணாகிறது. தனியார் மண்டபங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. ஆனால், அம்மா மண்டபத்தை திறக்க நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதன் மூலம் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக முதல்வர் தலையிட்டு, முடிக்கப்பட்ட திட்டங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- த. அறிவரசன், அ.தி.மு.க., வழக்கறிஞர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை