UPDATED : மார் 22, 2024 12:19 PM | ADDED : மார் 22, 2024 12:19 AM
ஆவடி, ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன், 55. இவர், ஆவடி அடுத்த மோரை பகுதியிலுள்ள 2,400 சதுர அடி நிலத்தை, கடந்த 14ம் தேதி, ஆவடி சார் - பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளார்.பத்திரம் பெறுவதற்கு, இணை பதிவாளரான செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த அமல்ராஜ், 34, என்பவர், கோடீஸ்வரனிடம் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.லஞ்சம் தர விரும்பாத கோடீஸ்வரன், திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி கோடீஸ்வரன் நேற்று மாலை, ரசாயனம் தடவிய 1 லட்சம் ரூபாய் மதிப்பு நோட்டுகளை, ஆவடி சார்-பதிவாளர் அலுவலகம் அருகே வைத்து, இணை பதிவாளர் கூறியபடி, சைதாப்பேட்டையைச் சேர்ந்த நிலத்தரகர் தென்னரசு, 29, என்பவரிடம் கொடுத்துள்ளார்.அப்போது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், தென்னரசுவை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில், இணை பதிவாளர் அமல்ராஜ் அறிவுறுத்தலின்படி, தென்னரசு லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இருவரையும், போலீசார் கைது செய்தனர்.