பூந்தமல்லி பூந்தமல்லியில், 187 கோடி ரூபாய் மதிப்பில், மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.சென்னையில் இரண்டாவது கட்டமாக, பூந்தமல்லி- - கலங்கரை விளக்கம் வரை, மொத்தம் 26 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.இதில், பூந்தமல்லி பைபாஸ் முதல் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரை மேம்பால பாதையாகவும், கோடம்பாக்கம் மேம்பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சுரங்கப்பாதையாகவும் வழித்தடம் அமைகிறது. இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி, முல்லை தோட்டம், கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், போரூர் பைபாஸ் உள்ளிட்ட, 19 மேம்பால மெட்ரோ ரயில் நிலையங்களும், ஒன்பது சுரங்கப்பாதை ரயில் நிலையங்களும் அமைகின்றன.பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வழித்தடத்தில் மேம்பால பாதை பணிகள் முடிக்கப்பட்டு, ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.மேலும், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை பராமரிக்கவும், பழுது நீக்கவும், பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் டிப்போ, 40.5 ஏக்கரில் 187 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கும் பணி, கடந்த 2021ல் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.பணிமனையில் உள்ள வசதிகள்: நிர்வாக கட்டடம், டிப்போ ஸ்டோர், ஒர்க் ஷாப் ஷெட், ஸ்டேபிளிங் ஷெட், டெஸ்ட் டிராக், பிட் வீல் லேத், ஆட்டோ கோச் வாஷிங் பிளான்ட், பம்ப் ரூம், எஸ்.டி.பி., இதர கட்டடங்கள் என, மொத்தம் 17 கட்டடங்கள் அமைகின்றன. 56 வரிசைகளில் ஆறு ரயில்களை நிறுத்தும் திறன் உள்ளது. நான்கு 'இன்ஸ்பெக் ஷன் பே லைன்'கள், ஐந்து 'ரிப்பேர் பே லைன்'கள் பராமரிப்பிற்காக அமைகிறது. ரயில்களின் செயல் திறனை மதிப்பிட 820 மீட்டர் நீளமுள்ள சோதனை பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிமனையில் ரயிலின் செயல்பாடு, டிரைவர் இல்லாமல் தானியங்கி முறையில் ரயில்களை இயக்கி பராமரித்து, பழுது பார்த்தல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான வசதிகள் உள்ளன. கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் முதல் பூந்தமல்லி பைபாஸ் நிலையம் வரையிலான வழித்தடத்தில், இந்த மெட்ரோ பணிமனையில் இருந்து ரயில்கள் வழங்கப்படும்.பூந்தமல்லி மெட்ரோ டிப்போ வரைபடம்பூந்தமல்லி - போரூர் 2025ல் சோதனை ஓட்டம்பூந்தமல்லி மெட்ரோ பணிமனை கட்டுமான பணி, 75 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. இங்கு இரண்டு மாதத்தில் ரயில் வந்தடையும். இந்த ரயில் பணிமனையில் உள்ள பாதையில் சோதனை செய்து, அதன் பிறகு 2025 நவம்பர் மாதம் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை, மேல்மட்ட வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.- டி.அர்ச்சுனன், மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர்.