சென்னை, சென்னை குடிநீர் வாரியம் சார்பில், தினமும் 107 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக, 5,700 கி.மீ., நீளத்தில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன.அதேபோல், தினமும் 75 கோடி லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இதற்காக, 5,500 கி.மீ., நீளத்தில் கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. அடைப்பை சரி செய்ய, 1.40 லட்சம் கழிவுநீர் மூடிகள் உள்ளன.கோடையில் குடிநீர் பயன்பாடு அதிகரிப்பதால், கழிவுநீர் வெளியேற்றமும் அதிகரித்துள்ளது. கழிவுநீரை கையாள, 321 கழிவுநீர் உந்து நிலையங்கள், ஐந்து சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. மேலும், 400க்கும் மேற்பட்ட அடைப்பு அகற்றும் இயந்திர வாகனங்கள் உள்ளன. பல இடங்களில், அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுகிறது. வணிக நிறுவனங்கள், குழாயில் சேரும் குப்பையை வடிகட்டியில் ஒதுக்கி, கழிவுநீரை மட்டும் பிரதான குழாயில் விட வேண்டும்.மாறாக, குப்பையுடன் கழிவுநீரை வெளியேற்றுவதால், பிரதான குழாயில் அடைப்பு அதிகரித்து, சாலையில் கழிவுநீர் வடிந்து ஓடுகிறது.இந்த அடைப்பை சரி செய்ய தற்போது, 'ரிமோட் கன்ட்ரோலில்' இயக்கப்படும், 'பாண்டிகூட்' என்ற நவீன இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.இந்த இயந்திரத்தை, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம், பொது பயன்பாட்டு நிதியில் வழங்கி உள்ளது. இந்த இயந்திரம், குடிநீர் வாரிய வாகனத்தில் பொருத்தி பயன்படுத்தப்படுகிறது.இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:தற்போது, ஆட்டோவில் பொருத்தப்பட்ட இயந்திரத்தின் வாயிலாக, அடைப்பை அகற்றி வருகிறோம். இந்த இயந்திரத்தை குழியில் இறக்கும்போது, அங்குள்ள அடைப்பை உறிஞ்சி நீக்கும். பின், அதில் சேர்ந்துள்ள கழிவுகளை ஊழியர்கள் வெளியேற்றுவர்.இந்த 'பாண்டிகூட்' நவீன இயந்திரம், 'ரிமோட் கன்ட்ரோல்' வாயிலாக இயக்கப்படுகிறது. இதனால், இயந்திரம் பாதாள சாக்கடை குழியில் சென்று, அடைப்பு ஏற்பட காரணமான கழிவுகள் மற்றும் துகள்களை வெளியேற்றும்.இதனால், மனித பயன்பாடு குறைந்து, எளிதில் அடைப்பை அகற்ற முடியும். முதற்கட்டமாக, திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, அடையாறு மண்டலத்தில் தலா ஒரு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதர நிறுவனங்கள் நிதி வழங்கும் போது, இதர மண்டலங்களிலும் இது விரிவாக்கம் செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.