சென்னை, அமெரிக்காவில் பணிபுரிவது போல நடித்து, திருமண இணையதளம் வாயிலாக வரன் தேடும், 20க்கும் மேற்பட்ட பெண்களிடம், பல லட்சம் ரூபாய் சுருட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், சில தினங்களுக்கு முன், மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமாரிடம் அளித்த புகார்: எனக்கு திருமணமாகி கணவர் இறந்துவிட்டார். 10 வயதில் மகன் உள்ளார். மறுமணம் செய்ய, திருமண இணையதளம் வாயிலாக வரன் தேடினேன்.அதன் வாயிலாக, அமெரிக்காவில் டாக்டராக பணிபுரிவதாக கார்த்திக் என்பவர் அறிமுகமானார். திருமணத்திற்கு பின், அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்வதாக கூறினார். அதற்கு விசா எடுக்க வேண்டும் என, 14 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்துவிட்டார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். இதில், தென்காசியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் ஜார்ஜ் குமார் துரை, 40, என்பவர் சிக்கினார். இவர், இதே பாணியில், பல பெண்களை ஏமாற்றியது தெரிய வந்தது.சென்னையில், தனியார் பல்கலையில், பி.டெக் படித்துள்ள இவர், அதன்பின், சென்னை ஐ.ஐ.டி.,யில் எம்.டெக் முடித்துள்ளார். 2016 - 19 வரை, அமெரிக்காவில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன், தமிழகம் வந்த அவர் திருமண தகவல் இணையதளம் வாயிலாக, கார்த்திக், சந்திரன், பிரசாந்த், பிரசாத், ஆனந்த் என, பல பெயர்களில் கணக்கு துவங்கி, அமெரிக்க டாக்டர், ராணுவ அதிகாரி போல நடித்து, 20க்கும் மேற்பட்ட பெண்களிடம், 80 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார் என்பது தெரியவந்து உள்ளது.அவர் பயன்படுத்திய 'வாட்ஸாப்' எண், அமெரிக்காவில் வாங்கியது போல காட்டுகிறது. அவர், சென்னை ஐ.ஐ.டி.,யில், எம்.டெக்., படித்த போது, பெண் ஒருவரை காதலித்துள்ளார். என்னிடம் பணம் இல்லாததால், அந்த பெண் என்னை அவமானப்படுத்தி பிரிந்து சென்றுவிட்டார். இதனால், பெண்களை குறிவைத்து பண மோசடி யில் ஈடுபட்டேன் என, வாக்குமூலம் அளித்து உள்ளார்.