உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நெடுஞ்சாலையில் மழைநீர் தேக்கம் கண்டுகொள்ளாத துறை அதிகாரிகள்

நெடுஞ்சாலையில் மழைநீர் தேக்கம் கண்டுகொள்ளாத துறை அதிகாரிகள்

சென்னை:புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராண்ட்லைன், அழிஞ்சிவாக்கம், புள்ளிலைன், விளாங்காடுபாக்கம் ஊராட்சிகளை, பல்வேறு பகுதிகளுடன் இணைக்கும் வகையில் செல்வ விநாயகர் நகர், பகுதியில், 2 கி.மீ.,க்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில், புழல் ஏரி உபரிநீர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தேங்கும் மழைநீர், இப்பகுதி வழியாக வெளியேறி வருகிறது. எனவே, இச்சாலையில் வெள்ளநீர் கடக்கும் இடத்தில், சிறிய அளவிலான கான்கிரீட் குழாய்களும் பொருத்தப்பட்டு உள்ளது.செல்வ விநாயகர் நகரில், குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில், அபாயகரமான பிளாஸ்டிக் அரவை மற்றும் கெமிக்கல் தொழிற்சாலைகள், கிடங்குகள் இயங்கி வருகின்றன.இவற்றில் பொருட்களை இறக்குவதற்கும், ஏற்றி செல்வதற்கும், 20 முதல் 30 டன்களுக்கு மேல் கொள்ளளவு கொண்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.இதனால், அழுத்தம் தாங்காமல், சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. சமீபத்தில் பெய்துவரும் மழையால், குளம் போல மழைநீர் தேங்கி உள்ளது. பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும், மாணவர்கள், அலுவலகங்கள் செல்லும் பொதுமக்கள், இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கனரக வாகனங்களால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையின் 'நம்ம சாலை' செயலியில் பல முறை புகார் அளித்தும் பலனில்லை. இனியாவது, சாலையை, புனரமைத்து போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை நெடுஞ்சாலைத்துறை துவங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை