புளியந்தோப்பு, புளியந்தோப்பு சரகத்தில், கஞ்சா மற்றும் போதை ஊசி புழக்கம் அதிகளவில் உள்ளது. இதை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டாலும், அவற்றை விற்போர் அதிகரித்து வருகின்றனர்.இந்நிலையில், கொடுங்கையூரில் உள்ள பிட்னஸ் சென்டரில் உடற்பயிற்சி செய்யும், மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த கார்த்தி, 27, என்பவர், போதை ஊசி அடிக்கடி பயன்படுத்துவதும், மருந்தகங்களில் வாங்குவதும் போலீசாருக்கு தெரியவந்தது.'டெர்மைவ்' என்ற மருந்துடன் ஊசி வாங்கி செல்வதை அறிந்த போலீசார், புளியந்தோப்பு சுற்று வட்டாரத்தில் அவர், அதிக விலைக்கு அவற்றை விற்பதையும் தெரிந்து கொண்டனர்.இதையடுத்து, நேற்று முன்தினம், போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், போதை மாத்திரை மற்றும் கஞ்சாவுடன், வலி நிவாரணி ஊசிகள் விற்பதும் தெரியவந்தது. இவற்றை, 'இந்தியா மார்ட்' ஆன்லைன் வாயிலாகவும், ஊசி கேட்போருக்கு விற்று வந்ததும் தெரிந்தது. அதேபோல், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பழுது பார்ப்பவரான எருக்கஞ்சேரியைச் சேர்ந்த வெங்கடேசன், 37, என்பவரும் 'இந்தியா மார்ட்' ஆன்லைன் தளம் வாயிலாக போதை ஊசிகளை, விற்று வந்ததும் தெரிந்தது. இவரையும், போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 21 ஊசிகள் மற்றும் மாத்திரைகளை, போலீசார் கைது செய்தனர்.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ஆன்லைனில் போதை ஊசி, மாத்திரைகள் விற்பனை சத்தமின்றி நடந்து வருகிறது.விற்பனை செய்பவர் யார், வாங்குபவர் யார் என்றே தெரியாது என்பதால், ஆன்லைன் தளங்களில் போதை ஊசி விற்பது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தளம், உற்பத்தியாளர்களுக்கும், பயனாளர்களுக்கும் இடைதரகரின்றி பொருட்கள் விற்கப்படுவதாக செயல்படுகிறது. அந்த வகையில், நன்கு தெரிந்த நபர்களுக்கு, தேவையான நேரத்தில் போதை ஊசி வழங்குவதற்காக, 'இந்தியா மார்ட்' இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்.அந்த தளத்தின் தேடுபொறியில், தனக்கு தேவையான மருந்துகளை உள்ளீடு செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் வாயிலாக, சம்பந்தப்பட்ட நபருக்கு அழைப்பு செல்கிறது. அதில் பேசுவோரில் சிலர், தேவையான மருந்துகளுடன் போதை மருந்துகளை அனுப்பும்படியும், அவ்வாறு அனுப்பினால் கூடுதல் பணம் தருவதாகவும் தெரிவிக்கின்றனர்.இதையடுத்து 'ஆர்டர்' பெற்றதும், மூன்றாம் நபர் வாயிலாகவோ அல்லது பொருட்களை எடுத்துச் செல்லும் போர்ட்டர் வாயிலாகவோ, சம்பந்தப்பட்ட நபருக்கு தடையின்றி போதை பொருட்கள் விற்கப்படுகின்றன.இந்த வகையில்தான், கார்த்திக் மற்றும் வெங்கடேசன், இந்தியா மார்ட் ஆன்லைன் தளம் வாயிலாக போதை வஸ்துகளை விற்று கைதாகியுள்ளனர். ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதை, போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.