சென்னை, கோயம்பேடு பகுதியில், 'ஓசோன் புராஜக்ட்ஸ்' நிறுவனம், 'மெட்ரோசோன்' என்ற பெயரில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்தப்படுகிறது.இதில், இரண்டு வீடுகளை வாங்க சஞ்சிவ் அகர்வால், ராஷ்மி அகர்வால், சந்தீப் அகர்வால், வினா அகர்வால் ஆகியோர் கூட்டாக, 2015ல் முன்பதிவு செய்தனர். இதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில், 2.23 கோடி ரூபாயை பல்வேறு தவணைகளில் செலுத்தினர். ஆனால், அந்நிறுவனம் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் வீட்டை ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து விசாரித்த போது, கட்டுமான நிறுவனம், கொரோனா காலத்தில் ஏற்பட்ட பல்வேறு காரணங்களை கூறியதாக தெரிகிறது.மேலும், மெட்ரோ ரயில் திட்டத்தை சுட்டிக்காட்டி, வீடுகளுக்கான நிலத்தின் பிரிக்கப்படாத பங்கான, யு.டி.எஸ்., அளவு குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டோர், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டனர்.இது தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணைய உறுப்பினர் சுனில்குமார் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் குறிப்பிட்ட புகார்களின் அடிப்படையில் பார்த்தால், கட்டுமான நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்கவில்லை என்பது உறுதியாகிறது. மேலும், வீடு தொடர்பான விஷயங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் மனுதாரருக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே, மனுதாரர் செலுத்திய, 2.23 கோடி ரூபாயை வட்டியுடன் கட்டுமான நிறுவனம் திருப்பித்தர வேண்டும். அடுத்த, 30 நாட்களுக்குள் இத்தொகையை கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.