| ADDED : ஜூலை 31, 2024 01:13 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர், சன்னதி தெருவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் காலடிப்பேட்டை சந்தை உள்ளது. இங்கு மளிகை கடை முதல் பழரசம் கடை வரை, 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.பல இடங்களில் நடைபாதையையும் இந்த கடைகள் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவோடு இரவாக, பொக்லைன் இயந்திரத்துடன் வந்த மாநகராட்சி அதிகாரிகள், கடைகளின் முன் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள், முன்புறம் இருந்த தகர செட்கள் போன்றவற்றை இடித்து அகற்றினர். இப்பகுதியில் அதிகாலைக்கு முன், 100க்கும் மேற்பட்ட கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில் கடைகளின் வெளியே அமைத்திருந்த கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதாக, கடை உரிமையாளர்கள் ஆவேசமடைந்தனர். தங்களுக்கு முன் அறிவிப்பு தராமல், இரவோடு இரவாக ஆக்கிரமிப்புகளை அகற்றியதாகவும், வியாபாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை சேதப்படுத்தி விட்டதாகவும் குற்றம்சாட்டி, காலடிப்பேட்டை வியாபாரிகள், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மண்டலக் குழு தலைவர் தனியரசு, வியாபாரிகளை சமாதானப்படுத்தினர். மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சு நடத்தி இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.