கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையத்தை, தினமும் பல்லாயிரக்கணக்கான பயணியர் பயன்படுத்துகின்றனர்.இந்த ரயில் நிலையத்தில், மத்திய அரசின் 'அம்ரூத்' திட்ட பணிகள் துவங்கப்பட்டு, அதற்கான கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. வாகன நிறுத்தங்கள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.ரயில் நிலையத்திற்கு, லால் பகதுார் சாஸ்திரி தெரு வழியாக, டிக்கெட் கவுன்டர் செல்வதற்கும், மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில் அருகில் முதலாவது நடைமேடைக்கு செல்வதற்கும் பாதைகள் உள்ளன.ராஜாஜி தெரு, ரயில்வே மேம்பாலம் அருகில் முதலாவது நடைமேடை செல்வதற்கும், ஒரு பாதை உள்ளது.இந்த மூன்று பாதைகளிலும் நடக்கும் கட்டுமானப் பணிகளால், பயணியர் ரயில் நிலையம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால், ரயில் நிலையத்திற்கு வரும் பயணியர், டிக்கெட் கவுன்டருக்கு செல்ல, ரயில் நிலையத்தைச் சுற்றி வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.தவிர, பணிக்கு சென்று திரும்பும் பெண்கள், ரயில் நிலையத்தில் இறங்கி, முதலாவது நடைமேடை வழியாக வெளியே வந்து, மீண்டும் நடைமேடையின் கடைசிப் பகுதிக்கு சென்று, வெளிச்சம் இல்லாத பாதையில் வெளியேற வேண்டிய நிலை உள்ளது.எனவே, கூடுவாஞ்சேரி ரயில் பயணியருக்காக, தற்காலிக பாதை வசதிகளையும், மின்விளக்கு உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளையும் ரயில்வே நிர்வாகம் செய்ய வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில்கள் மூலம் திருவள்ளூர், அரக்கோணம் வழியாக திருத்தணி ரயில் நிலையத்திற்கு பலரும் செல்கின்றனர்.சென்ட்ரலில் இருந்து, திருத்தணி ரயில் நிலையத்திற்கு, கடைசி மின்சார ரயில் இரவு 8:15 மணிக்கு இயக்கப்படுகிறது. இதை தவறவிடும் பயணியர், இரவு, 9:00 மணி, 9:30 மணி மற்றும் இரவு, 10:20 மணி ஆகிய நேரத்தில் சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்களில் பயணிக்கின்றனர். இரவு நேரத்தில், அரக்கோணத்தில் இறங்கி, அங்கிருந்து திருத்தணி நகருக்கு, 13 கி.மீ., துாரம் பயணிப்பதற்கு போதிய பஸ் வசதியில்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர்.திருத்தணி பயணியர் நலன்கருதி, இரவு நேரத்தில் மட்டும், சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களையும், திருத்தணி ரயில் நிலையம் வரை இயக்க வேண்டும் என, ரயில் பயணியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.