சென்னை, சென்னையில் சமீபமாக திருவொற்றியூர், பெரம்பூர், வியாசர்பாடி, சைதாப்பேட்டை, கிண்டி, பெருங்குடி தாம்பரம், பெருங்குளத்துார், புழல், செங்குன்றம் என, அனைத்து பகுதிகளிலும் தொடர் மின் தடை ஏற்படுகிறது. இதனால், இரவில் துாங்க முடியாமல், குழந்தைகள் முதல் முதியோர் வரை கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:இரவில், 10:00 மணிக்கு மேல் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது; அரை மணி நேரம், ஒரு மணி நேரம் கழித்து, மின்சாரம் வந்தாலும், 'லோ வோல்டேஜ்' எனப்படும் குறைந்த மின்னழுத்த பிரச்னை நிலவுகிறது. இதனால், 'ஏசி, மோட்டார் பம்ப்' உள்ளிட்ட சாதனங்களை இயக்க முடிவதில்லை. வெப்ப அலை, அனல் காற்று, புழுக்கத்துடன் மின்சாரமும் இல்லாததால், இரவில் துாங்க முடியவில்லை. குழந்தைகள், முதியவர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் சாதனங்களில் பழுது ஏற்படாமல் பராமரிப்பு பணி செய்ய வேண்டும். கோடையில் தடையில்லாமல் மின் வினியோகம் செய்ய, பிப்., முதல் பராமரிப்பு பணிக்காக, சென்னையில் எந்த இடத்திலும் மின் வினியோகம் நிறுத்தப்படவில்லை. கடும் வெயிலால் எதிர்பார்க்காத அளவுக்கு, மின் தேவை அதிகரித்து வருகிறது.தினமும் சராசரியாக, 3,000 மெகா வாட்டாக உள்ள சென்னையின் மின் தேவை, கடந்த ஏப்., 30ம் தேதி இரவு 10:30 மணிக்கு, 4,368 மெகா வாட்டாக அதிகரித்தது. ஒரு வீட்டில் ஒரு, 'ஏசி' சாதனம் இருந்த நிலையில், பல வீடுகளில் இரண்டு, மூன்று, 'ஏசி' உள்ளன.இதனால், மின் சாதனங்களில் முழு திறனுக்கு மின்சாரம் செல்வதால், சில இடங்களில் திடீரென பழுதாகின்றன. அவையும், உடனுக்குடன் சரிசெய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.