செங்குன்றம், சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரி, நீர்வள ஆதாரத்துறையின் அலட்சியத்தால், கழிவுநீரால் நிரம்பி மாசடைகிறது.சென்னையின் கோடைக்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம் ஏரிகளில் இருந்து, புழல் ஏரிக்கு தண்ணீரை திருப்பும் பணி, கடந்த சில நாட்களாக நடக்கிறது.அதனால், சோழவரம் ஏரியில் இருந்த தண்ணீர், புழல் ஏரிக்கு பாய்ந்தது. அதனால் சோழவரம் ஏரியில், 2 அடி உயரத்திற்கும் கீழ், நீர் இருப்பு குறைந்ததால், நேற்று முன்தினம் முதல், நீர் வெளியேற்றும் பணி நிறுத்தப்பட்டது. ஆனால், பூண்டி ஏரியில் இருந்து, நேற்று காலை நிலவரப்படி, வினாடிக்கு 415 கன அடி நீர், கிருஷ்ணா கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு பாய்கிறது.அதனால், கோடையை குளிர்விக்கும் வகையில், 19.82 அடி உயரத்திற்கு, 2.976 டி.எம்.சி., அளவிற்கு தண்ணீர் உள்ளது. பருவ மழைக்காலத்தில் மட்டுமே ஏரி நிரம்பி, 21.20 அடி உயரத்திற்கு, 3.3 டி.எம்.சி., இருப்பு வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.நீர் வரத்து காரணமாக, நிரம்பி உள்ள புழல் ஏரி, இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை துவங்கும் வரை, சென்னைக்கான குடிநீர் தேவையை சமாளிக்க உதவும் என, நீர்வள ஆதாரத் துறையினர் கூறினர். இந்நிலையில், சென்னையின் குடிநீர் தேவைக்காக புழல் ஏரியில் இருப்பு வைக்கப்படும் தண்ணீர், திருமுல்லைவாயில் சுற்றுவட்டார குடியிருப்புகளில் இருந்து, வெளியேற்றப்படும் கழிவுநீரால் மாசடைந்து வருகிறது.திருமுல்லைவாயில், கிருஷ்ணா கால்வாய் அருகே, ஆரிக்கம்பேடு பிரதான சாலையையொட்டி வெங்கடாச்சலம் நகர், அருணா நகர், அனுக்கிரஹம் நகர், கற்பகாம்பாள் நகர், நந்தினி நகர், மூகாம்பிகை நகர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன.அவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், ஆங்காங்கே அமைக்கப்பட்ட சிறிய கால்வாய் மற்றும் குழாய்கள் வழியாக, வெங்கடாச்சலம் நகர் அருகே, புழல் ஏரிக்குள் பாய்கிறது.இதனால், கழிவுநீரில் செழித்து வளரும் ஆகாயத்தாமரை தாவரமும், ஏரி முழுக்க அடர்ந்து வளர்ந்துள்ளது.அதனால், புழல் ஏரி மாசடைந்து, சுகாதார சீர்கேடும் அதிகரித்துள்ளது.அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நீர்நிலை ஆர்வலர்கள், நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளிடம், பலமுறை புகார் செய்தனர்.அதன் எதிரொலியாக, ஆவடி மாநகராட்சி மூலம் கடந்தாண்டு, 1 கோடி ரூபாய் மதிப்பில், வெங்கடாச்சலம் நகர் சந்திப்பில், புழல் ஏரியில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்க, நிலையம் அமைக்கப்பட்டது. அதில், தினமும் 40,000 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, புழல் ஏரியில் விடப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அந்த சுத்திகரிப்பு நிலையம், ஓரிரு மாதம் மட்டுமே செயல்பட்டதாகவும், அதன் பிறகு அது செயல்படாமல் உள்ளதாகவும் புகார் எழுந்தது.அதனால், கழிவுநீர் புழல் ஏரியில் கலப்பது தொடர்கிறது. அதிகாரிகளின் அலட்சியத்தால், சென்னையின் நீர் ஆதாரமான புழல் ஏரி, கழிவுநீர் கடலாக மாறி வருவதாகவும், நீர்நிலை ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.மேலும், அரசுத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தை வெளிப்படுத்த, ஏரியின் இன்றைய நிலையை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.அதில், புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளை தனியார் ஆக்கிரமித்து வீடு, கடைகள் கட்டி உள்ளனர். இப்போதும், ஏரியின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில் சிலர், புதிய வீடு, கடைகள் கட்டி வருகின்றனர்.அவற்றை தடுக்க, அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், சென்னைக்கான குடிநீர் ஆதாரமான புழல் ஏரியை, மீட்க முடியாத நிலை ஏற்படும் என, குற்றம்சாட்டி உள்ளனர்.