| ADDED : ஜூலை 07, 2024 12:37 AM
ஆதம்பாக்கம், ஆலந்துார், ஜி.எஸ்.டி., சாலையையும், தாம்பரம் - வேளச்சேரி சாலையையும் இணைக்கும் பிரதான வழித்தடமாக பரங்கிமலை - வேளச்சேரி உள்வட்ட சாலை அமைந்துள்ளது.இச்சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து, துரித உணவகம், காய்கறி, பழங்கள், மசாலா, பானி பூரி கடைகள், சிற்றுண்டி உணவகங்கள் உள்ளிட்ட கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கடைகளின் கழிவுகள், சாலையின் இருபுறமும் செல்லும் வீராங்கல் ஓடையில் கொட்டப்பட்டு விடப்பட்டது. இதனால் மழைக்காலத்தில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்புகளில் புகுந்தது.மேலும், நடைபாதை கடைகளுக்கு வரும் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து சிக்கலும் ஏற்பட்டு வந்தது.இது தொடர்பாக நலச்சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து, மாநகராட்சிக்கு புகார் அளித்து வந்தனர்.இந்நிலையில், உள்வட்ட சாலையில் வேளச்சேரி முதல் நங்கநல்லுார் வரையிலான நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள், ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. ஆக்கிரமிப்பு கடைகளின் முகப்பும் அகற்றப்பட்டன.