உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆக்கிரமிப்பை அகற்றாமல் வடிகால் குறுகும் சாலையில் விபத்து அபாயம்

ஆக்கிரமிப்பை அகற்றாமல் வடிகால் குறுகும் சாலையில் விபத்து அபாயம்

செங்குன்றம்:தனியார் ஆக்கிரமிப்பால் குறுகிய சோத்துப்பாக்கம் சாலையில், 13 கோடி ரூபாய் மதிப்பீடில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. இதனால், அச்சாலை மேலும் குறுகி, விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.செங்குன்றம் ஜி.என்.டி., சாலை சந்திப்பு முதல் தீர்த்தகிரையம்பட்டு, சோத்துப்பாக்கம் சாலையின் இரு பக்கமும், 2.4 கி.மீ., துாரத்திற்கு, 13 கோடி ரூபாய் மதிப்பில் 7 அடி அகலம், 7 அடி ஆழம் கொண்ட, புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, ஏப்ரல் மாதம் துவங்கியது.மேற்கண்ட பணி நடக்கும், சோத்துப்பாக்கம் சாலை 33 - 55 அடி அகலம் உடையது. ஆனால், 50க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளால், 18 அடியாக குறுகி விட்டது. கனரக வாகனம் சென்றால், எதிர் திசையில் வரும் வாகனத்தை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.அந்த சாலையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு வந்து செல்லும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாகி விட்டது.இந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை வாயிலாக, 13 கோடி ரூபாய் மதிப்பில், புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது. அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், ஏற்கனவே ஆக்கிரமிப்புகளால் குறுகிய சாலையில், 7 அடி அகல வடிகால் பணி நடப்பதால், மேலும் குறுகி, நிலைமை மோசமாகி உள்ளது. மழை, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட, பல்வேறு காரணங்களால், வடிகால் அமைக்கும் பணி ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் என கூறப்படுகிறது.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், இரு பக்கமும் வடிகால் அமைக்கும் பணி முடிந்தால், 15 அடி சாலையாகி விடும், அதன் பின் ஒரு வழிப்பாதையாக மட்டுமே, அதை பயன்படுத்தும் நிலை ஏற்படும்.ஆக்கிரமிப்பால் குறுகிய சோத்துப்பாக்கம் சாலையில், உயிர் காக்கும் அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது. அதனால், பாரபட்சமின்றி, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகே, மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். வடிகால் பள்ளம் தோண்டி, உயிர் பலி ஆபத்தை நெடுஞ்சாலைத்துறை தவிர்க்க வேண்டும். சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். அதில் அலட்சியம் காட்டினால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது, பொதுநல வழக்கு தொடர உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மின் பாதிப்பு

சோத்துப்பாக்கம் சாலையில், ஜே.சி.பி., இயந்திரம் மூலம், வடிகாலுக்கான பள்ளம் தோண்டும் போது, அவ்வப்போது மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, பல மணி நேரம் மின்சாரம் தடையாகிறது. மேற்கண்ட பிரச்னையால், மே 29ம் தேதி காலை, 10:00 முதல் இரவு, 10:00 மணி வரை, செங்குன்றம் சுற்றுவட்டாரத்தில்,12 மணி நேரம் மின்சாரம் தடையானது. மேலும், மழைநீர் வடிகால் பணி நடக்கும், 2.4 கி.மீ., துாரத்திற்கு, 96 மின் கம்பங்களும், 18 மின் மாற்றிகளும் உள்ளன. வடிகால் பணிக்காக, மின்வாரியத்திடம் உரிய அனுமதி பெற்று, அவற்றை மாற்றி அமைக்கவும் பல நாட்களாகும். அதனால், மின் தடை பாதிப்பும் தொடரும் என, கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி