உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிளாம்பாக்கம் பஸ் நிலையம், செங்குன்றம் கிடங்கில் ரூ.70 கோடி போதை பொருள் பறிமுதல்: 3 பேர் கைது

கிளாம்பாக்கம் பஸ் நிலையம், செங்குன்றம் கிடங்கில் ரூ.70 கோடி போதை பொருள் பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை : சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை மையமாக வைத்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 70 கோடி ரூபாய் மதிப்புள்ள, மெத்ஆம்பெட்டமைன் போதை பொருளையும் பறிமுதல் செய்தனர். - சென்னையில் இருந்து, பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில், கும்பல் ஒன்று போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகவும், புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை மையமாக வைத்து, அக்கும்பல் செயல்படுவதாகவும், மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சென்னை முழுதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த, 24ம் தேதி, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில், பயணி போல சந்தேகப்படும் வகையில் நின்ற, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பைசல் ரஹ்மான்,38 என்பவரை, அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். உடன், அவர் வாகனம் ஒன்றில் ஏறி தப்பிக்க முயன்றார். இருப்பினும், அதிகாரிகள் மடக்கிப் பிடித்து, அவரின் உடமைகளை சோதனை செய்தனர். அதிலிருந்த, 5.970 கிலோ மெத்ஆம்பெட்டமைன் போதை பொருள் மற்றும் 7 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்ததுடன், பைசல் ரஹ்மானையும் கைது செய்தனர். விசாரணையில், அவரின் கூட்டாளிகள், சென்னை அருகே செங்குன்றம் பகுதியில், குடோன் ஒன்றில் போதைப் பொருட்களை பதுங்கி வைத்திருப்பதாக தெரிவித்தார். அவருடன், 27ம் தேதி இரவு, அந்த இடத்திற்கு சென்ற அதிகாரிகள், சென்னையை சேர்ந்த மன்சூர், 40; ராமநாதபுரம் மாவட்டத்தை சேரந்த இப்ராஹிம்,36, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 954 கிராம் மெத்ஆம்பெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். மூவரிடமும் பிடிபட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு, 70 கோடி ரூபாய்.இவர்கள் சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகளையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பஸ் நிலையம், போதை பொருள் கடத்தல் கும்பல்களின் கூடாரமாக மாறி வருகிறது. அங்கு, சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. தற்போது சிக்கியுள்ள போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த மூவரும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில், ரகசிய கூட்டங்கள் நடத்தி உள்ளனர். இங்கிருந்து தான், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல், பஸ் பயணியர் போல, துாத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, கஞ்சா, மெத்ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், பஸ் நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை