| ADDED : ஜூலை 31, 2024 12:18 AM
சென்னை, தமிழக அரசின், 'பேம் டி.என்' எனப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வசதியாக்கல் நிறுவனம், சிறு தொழில் நிறுவனம் துவக்க பல்வேறு அரசு துறைகளின் அனுமதியை பெற்று தருவது, கண்காட்சியில் பங்கேற்க நிதி வழங்குவது உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது.இந்நிறுவனம், சிறு தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளை, பெரிய நிறுவனங்கள் வாங்குவதற்கான விற்பனையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை, சென்னை கிண்டி, 'சிட்கோ' வளாகத்தில் நேற்று நடத்தியது. இதில், மத்திய அரசின் பி.எச்.இ.எல்., நிறுவனம் மற்றும் வாகன உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகளில் உள்ள பெரிய தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன.அந்நிறுவனங்களிடம், 200க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளின் விபரங்களை தெரிவித்தன.இதுகுறித்து, சிறு தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பெரிய நிறுவனங்களை சார்ந்தே சிறு நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆனால், சிறிய நிறுவனங்களால், பெரிய நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரே இடத்தில் நடக்கும் விற்பனையாளர் சந்திப்பு நிகழ்ச்சி வாயிலாக, பெரிய நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் பொருட்கள் குறித்த விபரங்களை, சிறு தொழில் நிறுவனங்களிடம் தெரிவித்தன; இதனால், பெரிய, சிறு நிறுவனங்கள் இடையேயான இடைவெளி குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.