அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி உரிமம் பெறாமல் செயல்படும், 'ஸ்பா, மசாஜ் சென்டர்கள்' குறித்து, போலீசாருடன் இணைந்து கணக்கெடுப்பு நடத்த, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தவிர, சிறப்பு குழு அமைத்து, ஸ்பா, மசாஜ் சென்டர்களில் அத்துமீறலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளது. பாலியல் தொழில்
சென்னை மாநகராட்சியில், ஸ்பா, மசாஜ் சென்டர்கள், பியூட்டி பார்லர் என, 5,000க்கும் மேல் இயங்கி வருகின்றன. இதில், முறையாக, 1,000க்கும் மேற்பட்டவை மட்டுமே, மாநகராட்சியிடம் அனுமதி பெற்று இயங்கி வருவதாக கூறப்படுகிறது.மற்றவை, மாநகராட்சியின் அனுமதி பெறாமலும், விதிமுறையை பின்பற்றாமலும் இயங்கி வருகின்றன. சில இடங்களில், ஸ்பா, மசாஜ் சென்டர் என்ற பெயரில், பாலியல் தொழில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.பல்வேறு சட்டவிரோத செயல்கள் நடக்கும் இடங்களாக செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அவ்வப்போது, சென்னை போலீசார், ஸ்பா, மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடத்தியவர்களை, கைது செய்து வருகின்றனர்.இதை மேலும் கட்டுப்படுத்த, சென்னை மாநகராட்சியில், ஸ்பா, மசாஜ் சென்டர் உள்ளிட்டவை நடத்த, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி விதித்துள்ளது. அவை முறையாக பின்பற்றி ஸ்பா, மசாஜ் சென்டர், பியூட்டி பார்லர் ஆகியவை முறையாக அனுமதி பெற வேண்டும்.அவ்வாறு அனுமதி பெறுவதற்கு முன், போலீசாரின் தடையில்லா சான்று பெறுவது அவசியம். அனுமதி பெற்று, மூன்றாண்டுக்கு ஒருமுறை, 25,000 ரூபாய் செலுத்தி புதுப்பிப்பதும் அவசியம் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.இந்நிலையில், அனுமதி பெற்ற மாநகராட்சியின் விதிமுறையை பின்பற்றாத ஸ்பா, பியூட்டி பார்லர், மசாஜ் சென்டர் ஆகியவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும். அனுமதி பெறாதவை கண்டறியப்பட்டால், மூடப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி எச்சரித்துள்ளது. அனுமதி பெறாத மையம்
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மாநகராட்சியில் ஸ்பா, மசாஜ் சென்டர் உள்ளிட்டவை உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா என, கண்காணிக்கப்பட்டு வருகிறது.மாநகராட்சி உரிமம் பெற்ற ஆவணத்தை, வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் ஒட்ட வேண்டும்.அவ்வாறு உரிமம் பெறாமல் இயங்கும் மையங்கள் குறித்து, வாடிக்கையாளர்கள் மாநகராட்சியில் புகார் அளிக்கலாம்.அனுமதி பெறாத மையங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, காவல்துறையுடன் இணைந்து சிறப்பு குழு அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பூட்டிய அறைக்குள் மசாஜ் சேவை கூடாது
மாநகராட்சியின் விதிமுறைகள்: ஸ்பா, மசாஜ் சென்டர், பியூட்டி பார்லர் நடத்த முறையான அனுமதி அவசியம். இங்கு, அரசால் தடை செய்யப்பட்ட எந்தவொரு தயாரிப்புகளையும் காட்சிப்படுத்தவோ, விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது அனைத்து வாடிக்கையாளர்களும் பதிவு செய்து, பராமரிக்க வேண்டும் வேலை நேரத்தில் வெளிப்புற கதவுகளை திறந்து வைக்க வேண்டும். பூட்டிய கதவுக்குள் மசாஜ் சேவைகள் கூடாது மசாஜ் சேவை வழங்கப்படும் ஒவ்வொரு அறையிலும், குறைந்தபட்ச விளக்கு மற்றும் காற்றோட்ட வசதி அவசியம் நுழைவு பகுதி, வெளியேறும் பகுதிகளில், தனியுரிமைக்கு பாதிக்காத வகையில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் இதுபோன்ற மையங்களில் பாலியல் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது இரு பாலினத்தவருக்கும் மையங்கள் இருந்தால், தனி அறைகளை வழங்க வேண்டும்.- நமது நிருபர் -