திருவொற்றியூர்:திருவொற்றியூர் மேற்கில், அம்பேத்கர் நகர், ராஜா சண்முகம் நகர், சரஸ்வதி நகர், பூம்புகார் நகர், ஜோதி நகர், பொன்னியம்மன் நகர், கலைஞர் நகர், கலைவாணர் நகர் உட்பட 25க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன.இப்பகுதியினர், திருவொற்றியூர் கிழக்கு மற்றும் நெடுஞ்சாலைக்கு செல்வதற்கு, மாணிக்கம் நகர் - அம்பேத்கர் நகர் ரயில்வே இணைப்பு சுரங்கப்பாதை ஒன்றே பிரதானம்.இந்த சுரங்கப்பாதை, 12 - 14 அடி அகலத்தில் உள்ளது. இதில், பைக், ஸ்கூட்டர், ஆட்டோ செல்ல முடியும். கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் செல்ல முடியாது.இந்த நிலையில், காலை, மாலை வேளையில், பள்ளி கல்லுாரி, வேலைக்கு செல்வோர், 8:00 - 9:30 மணிக்குள், ஒட்டுமொத்தமாக, மக்கள் திருவொற்றியூர் கிழக்கு மற்றும் நெடுஞ்சாலைக்கு படையெடுப்பதால், சுரங்கப்பாதை நெரிசலால் திணறி போய் விடுகிறது.அதுபோன்ற வேளைகளில், மாணவர்கள் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. சில நேரங்களில், அவசரத்தில் முந்தி செல்பவர்களால், வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மாணிக்கம் நகர் ரயில்வே சுரங்கப்பாதையை அகலப்படுத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.இந்த சுரங்கப்பாதை இல்லாத பட்சத்தில், மாட்டுமந்தை மேம்பாலம் வரை 5 கி.மீ., துாரம் சென்றும், அங்கிருந்து சத்தியமூர்த்தி நகர் வரை, 6 கி.மீ., துாரம் பயணித்தும், திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.