| ADDED : ஜூன் 02, 2024 12:27 AM
சென்னை, கராத்தே, ஜூஜோஸ் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை ஒருங்கிணைத்த விளையாட்டாக, குடோ விளையாட்டு உள்ளது.இது, தேசிய விளையாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு, தேசிய விளையாட்டு பல்கலையிலும் கற்பிக்கப்படுகிறது.இந்த விளையாட்டுக்கான தேசிய அளவிலான இரண்டாவது போட்டிகள், ஹிமாச்சல பிரதேச மாநிலம், சோலானில் உள்ள கிரீன் ஹில்ஸ் கல்லுாரியில், கடந்த 25ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடந்தன.இதில், 25 மாநில போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அபியா என்ற மாணவி, 21 வயதுக்கு மேற்பட்டோருக்கான பெண்கள் அணியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றார். அதேபோல், 16 வயதுக்குட்பட்ட 58 கிலோ எடைப்பிரிவில் விளையாடிய ஹரேஷ்; 11 வயதுக்குட்பட்ட 36 கிலோ எடைப்பிரிவில் விளையாடிய பிரைசன் கிரில்ஸ் ஆகியோர், ஆண்கள் பிரிவில் வெண்கல பதக்கங்களை வென்றனர்.அதேபோல், 14 வயதுக்குட்பட்ட 39 கிலோ எடைப்பிரிவில் விளையாடிய நேத்ரா என்ற மாணவியும் வெண்கல பதக்கம் வென்றார்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட குடோ சங்க தலைவர் திமோத்தி கூறுகையில், ''இந்த விளையாட்டை, மத்திய அரசு அங்கீகரித்து, வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. ஆனால், தமிழக அரசு இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை. அவ்வாறு வழங்கினால், மாணவர்களின் எதிர்காலம் சிறக்கும்,'' என்றார்.