சென்னை, தண்டையார்பேட்டை அம்மணி அம்மன் தோட்டம் அருகே, கடந்த 2021 செப்., 30ல் போதை மாத்திரை விற்ற, அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற மாங்கா சதீஷ், 26, என்பவரை, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் இருந்து, 2 கிலோ கஞ்சா, 1,260 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த குரு பிரசாத், 36, கமருதீன், 31, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.வழக்கு விசாரணை, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.திருமகள் முன் விசாரணைக்கு வந்தது. போலீசார் சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி, 'சதீஷ் மீதான குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள், சாட்சிகளுடன் அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளன. எனவே, அவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 1.70 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. மற்ற இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்' என தீர்ப்பளித்தார்.