| ADDED : ஜூலை 24, 2024 12:19 AM
திரு.வி.க.நகர், அரசு துறைகளிடையே ஒருங்கிணைப்பு இன்றி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தினால் சம்பந்தப்பட்டோர் மீது வழக்கு போடுங்கள்' என, அதிகாரிகளை வட்டார துணை கமிஷனர் கடுமையாக சாடினார்.சென்னை, திரு.வி.க. நகர் மண்டலத்தின் 26வது வார்டுகுழு கூட்டம் நேற்று ஓட்டேரியில் நடந்தது. இதில், வட்டார துணை கமிஷனர் பிரவீன்குமார், மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், மண்டல குழு அதிகாரி முருகன் மற்றும் அந்தந்த வார்டுகளின் மாநகராட்சி, குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், மின்வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் மொத்தம் 76 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் மின்வாரியம் மற்றும் குடிநீர் வாரியத்தின் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர். மின்வாரியம் மாநகராட்சியோடு ஒருங்கிணைந்து செயல்படுவது இல்லை என குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து வட்டார துணை கமிஷனர் பிரவீன்குமார் பேசியதாவது:மாநகராட்சியில் புதிய சாலை போட்ட பின், பின்னாலேயே குடிநீர் அல்லது மின்வாரியம் வந்து பள்ளம் தோண்டுகின்றனர். இல்லையென்றால் தொலை தொடர்பு நிறுவன ஒப்பந்ததாரர்கள் சாலையை சேதமாக்குகின்றனர். சாலை போடுவதற்கு முன்பே, அந்த சாலையில் குடிநீர் அல்லது மின்வாரியம் சம்பந்தப்பட்ட மற்ற எந்த வேலையாக இருந்தாலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.கடந்த மாதம் 9வது மண்டலத்தில் புதிதாக போட்ட சாலையில், மின்வாரிய வேலை செய்த ஒப்பந்ததாரர்கள் பொக்லைனால் சாலையை சேதமாக்கினர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல, ஒத்துழைக்காதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுங்கள். மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்களை சுதந்திரமாக செயல்பட விடுங்கள். சென்னை நகர சாலையில் உரிமை கோராத வாகனம் நிறைய உள்ளது. சாலையில் நிற்கும் வாகனங்களை, சம்பந்தப்பட்ட அந்தந்த வார்டு அதிகாரிகள் கணக்கெடுத்து, அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் சான்று வாங்கி, அப்புறப்படுத்த வேண்டும். இதற்காக செனாய் நகரில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வாகனங்களை கொண்டு சேர்க்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு வாகனத்திற்கும் 2,500 ரூபாய் கட்டணமும் தரப்படும். இதை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.