திருவொற்றியூர், திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகர் கெனால் சாலையில், நேற்று முன்தினம் மாலை, கன்டெய்னர் லாரியின் கீழ் அமர்ந்து, இருவர் மதுபான வகைகளை விற்றனர்.சுதந்திர தினத்தில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவது குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.இதையடுத்து, சாத்தாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, கள்ளத்தனமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட, இருவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.விசாரணையில் அவர்கள், திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த காளீஸ்வரன், 34, மணிகண்டன், 24, என தெரிந்தது.அவர்களிடமிருந்து, 10 பீர் பாட்டில்கள், ஒன்பது குவார்ட்டர் மதுபான பாட்டில்கள், 20,000 ரூபாய் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.இருவரையும் கைது செய்த போலீசார், விசாரணைக்குப் பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வியாசர்பாடி, உதயசூரியன் நகர், 'பி பிளாக்'கில், கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பதாக எம்.கே.பி.நகர் போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற வியாசர்பாடி, உதயசூரியன் நகர், 'பி பிளாக்'கைச் சேர்ந்த சுப்பையா, 38, என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.