| ADDED : ஜூன் 02, 2024 12:24 AM
வேளச்சேரி, ஆதம்பாக்கம், மேட்டுக்கழனி தெருவைச் சேர்ந்தவர் ரோஹித், 19. ஆதம்பாக்கம், கரிகாலன் தெருவைச் சேர்ந்தவர் ஷாம்ரவி, 18. நண்பர்களான இருவரும், துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில், பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு, வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, மோட்டார் பைக்கில் பள்ளிக்கரணை நோக்கி புறப்பட்டனர். ஷாம்ரவி வாகனத்தை ஓட்ட, ரோஹித் பின்னால் அமர்ந்திருந்தார். வேளச்சேரி மேம்பாலம் ஏறிச் செல்லும்போது, அசோக் சொக்கலிங்கம், 49, என்பவரின் கார் பழுதாகி சாலையின் மையப்பகுதியில் நின்றிருந்ததால், அதிவேகமாக சென்ற பைக் அந்த காரின் மீது மோதியது. இதில், இருவரும் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். வேளச்சேரி போக்குவரத்து போலீசார், இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். காயம் தீவிரமாக இருந்ததால், அங்கிருந்து அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.நள்ளிரவு சிகிச்சை பலனின்றி ஷாம்ரவி பலியானார். நேற்று அதிகாலை, ரோஹித் இறந்தார். சம்பவம் தொடர்பாக, கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார், கார் ஓட்டுனர் அசோக் சொக்கலிங்கத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.