உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வண்ணாரப்பேட்டை நடைபாதை வளாகம்... வேகம் 18 மாதத்தில் பணிகளை முடிக்க சுறுசுறுப்பு

வண்ணாரப்பேட்டை நடைபாதை வளாகம்... வேகம் 18 மாதத்தில் பணிகளை முடிக்க சுறுசுறுப்பு

ராயபுரம், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 2019, தி.நகர், பாண்டி பஜாரில் 39 கோடி ரூபாய் மதிப்பில், நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக, சென்னை வண்ணாரப்பேட்டை, எம்.சி.ரோடில், 28 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வண்ணாரப்பேட்டை, பி.எஸ்.என்.எல்., ஜங்ஷன் துவங்கி, சிமென்ட்ரி சாலை ஜங்ஷன் வரை நடைபாதை வளாகம் அமைக்கப்பட உள்ளது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:இத்திட்டத்தின் மூலம், வெளிநாடுகளில் உள்ளதை போல், சர்வதேச தரத்திலான சாலையாக, எம்.சி.ரோடு மேம்படுத்தப்படுகிறது. அகலமான நடைபாதைகள், பூங்காக்கள், பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கை வசதி, குழந்தைகள் விளையாடும் இடங்கள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படுகின்றன.கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி, மின்சாரம், தொலைத்தொடர்பு கேபிள் செல்ல பிரத்யேக குழாய்கள், புதிய மழைநீர் வடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள், மின்சார துறை மற்றும் குடிநீர் வாரியம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடக்கிறது. இந்த சாலையின் முன்பக்கம் அலங்கார வளைவு, சாலையின் இருபுறமும் அலங்கார விளக்குகள், இருக்கைகள் அமைக்கப்படுகிறது. தரைகள் கிரானைட், பேவர் பிளாக், கோடா உள்ளிட்ட கற்களால் அலங்கரிக்கப்படுகிறது. நவீன நடைபாதை வளாகம் பயன்பாட்டிற்கு வந்தால், வடசென்னை மக்களின் சிறந்த பொழுதுபோக்கு தலமாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.இத்திட்டத்தில் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக, ராயபுரம் எம்.எல்.ஏ., அலுவலகம்மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதுகுறித்து ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி கூறியதாவது:வியாபாரிகளின் விற்பனை பாதிக்காமல் நவீன நடைபாதை வளாக பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மாதந்தோறும் எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் சங்கத்தினருடன் இணைந்து, தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டு, திட்டத்தின் முன்னேற்றம் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், ராபின்சன் பூங்காவில் 350 இருசக்கர வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட உள்ளது. தற்போதைய ராயபுரம் எம்.எல்.ஏ., அலுவலகம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு, பின் அந்த இடம் இடிக்கப்பட்டு, கார் நிறுத்தும் இடமாக மாற்றப்பட உள்ளது. ராயபுரம் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு மாற்று இடம் கேட்டு, கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் 18 மாதத்திற்குள் முடிந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். இதன் மூலம் வண்ணாரப்பேட்டையில், கடைகளில் விற்பனை இருமடங்காகும்.இவ்வாறு அவர் கூறினார்.எம்.சி.ரோடு முழுதும், 200க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன. இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், அவர்களுக்கும் அனைத்து வசதிகளுடன் கூடிய மாநகராட்சி வணிக வளாகம் அமைத்து தர வேண்டும்.- எம்.சி.ரோடு நடைபாதை வியாபாரிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ