| ADDED : ஆக 23, 2024 12:21 AM
சென்னை, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள முருகேசன் நாயக்கர் என்ற வணிக வளாகத்தில், கன்னிராஜ் என்பவர், 'ஆல்செட் பிசினஸ் சொல்யூஷன்' என்ற பெயரில், ஐந்து ஆண்டுகளாக கால் சென்டர் நடத்தி வருகிறார். அங்கு, 800 பேர் பணிபுரிகின்றனர். அவர்கள், தனியார் வங்கிகள் வழங்கிய தனி நபர் கடன், கிரெடிட் கார்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர். இங்க, மத்திய அரசின் விதிகளை மீறி ஒரே நிறுவனத்தின் பெயரில், நுாற்றுக்கணக்கான சிம்கார்டுகள், சிம் டூல்ஸ் பாக்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக, மொபைல் போன் நிறுவன அதிகாரி பிரபு என்பவர், சென்னையில் உள்ள, மத்திய தகவல் தொடர்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதையடுத்து, கால் சென்டரில், ஐ.பி., எனப்படும் மத்திய உளவுப்பிரிவு டி.எஸ்.பி., பவான் மற்றும் தகவல் தொடர்பு துறை அதிகாரிகள் ஐந்து பேர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் அருணுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இங்கு சட்ட விரோதமாக சிம்கார்டுகள் மற்றும் சிம் டூல்ஸ் பாக்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு வருவது சோதனையில் தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.