செங்குன்றம்:புழல் மத்திய சிறைச்சாலை எதிரே, சைக்கிள் ஷாப் பேருந்து நிறுத்தம் மற்றும் ரெட்டேரி உள்ளிட்ட பகுதிகளில், வாகன ஓட்டிகளை நிலைதடுமாற வைத்து, விபத்தை ஏற்படுத்தும் வகையில், 1 அடி ஆழம் கொண்ட பள்ளங்கள் உள்ளன.குறிப்பாக, புழல் சிறைச்சாலை பகுதி சாலை படுமோசமாக உள்ளது.மேலும், இந்த பள்ளங்களால், இருசக்கர வாகன ஓட்டிகளே அதிகளவில் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல, மாநில நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் உள்ள அம்பத்துார் கள்ளிக்குப்பம் முதல், புழல் சந்திப்பு வரையிலான, 8 கி.மீ., துார செங்குன்றம் சாலை மோசமான நிலையில் உள்ளது.மேலும், மாநகராட்சி பராமரிப்பில் உள்ள, 4 கி.மீ., துார மாதனான்குப்பம் சாலை, செங்குன்றம் ஜி.என்.டி., சாலை சந்திப்பு முதல், தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சி எல்லை வரையிலான, 3 கி.மீ., துார சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலை ஆகியவை படுமோசமான நிலையில் உள்ளது.சில நாட்களாக பெய்த மழையால், இச்சாலைகள் மேலும் சேதமடைந்துள்ளன. இது குறித்து சமூக ஆர்வலர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க, அதிகாரிகள் முன்வர வேண்டும்.
யார் பொறுப்பு?
கடந்த ஜனவரி 23ம் தேதி காலை, கொரட்டூர் வடக்கு, 200 அடி சாலை சந்திப்பில், சேதமடைந்த சாலையால், இருசக்கர வாகனத்தில் சென்ற வித்யா, 35, என்பவர், மாநகர பேருந்தில் சிக்கி பலியானார். அதை தொடர்ந்து, 25ம் தேதி காலை இருசக்கர வாகனத்தில், புழலில் உள்ள அலுவலகத்திற்கு சென்ற கவிதாஞ்சலி, 29, என்பவர், அம்பத்துார் - -செங்குன்றம் சாலையில் இருந்த பள்ளத்தால் நிலைதடுமாறி, லாரியில் சிக்கி பலியானார்.இந்த சாலையில், அதிகளவிலான பெண்கள் தங்கள் பிள்ளைகளை, இருசக்கர வாகனத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு அழைத்து செல்வது வழக்கம். இச்சாலையில் உள்ள நிலைதடுமாற வைக்கும் பள்ளங்களால், அவர்கள் ஒருவித அச்சத்துடனேயே குழந்தைகளை அழைத்து சென்று வருகின்றனர்.