சென்னை, தென் சென்னை லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் மருத்துவர் தமிழிசை, வேளச்சேரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, திருவான்மியூரில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.அவருடன் பா.ஜ., மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ., விஜயதரணி மற்றும் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், பிரசாரம் செய்தனர்.அப்போது, தென்சென்னை தொகுதியில் வசிக்கும் மீனவர்கள் ஏன் தாமரை சின்னத்தில் தனக்கு ஓட்டளிக்க வேண்டும் என, பா.ஜ., அரசின் சாதனைகளை பட்டியலிட்டு, தமிழிசை விளக்கம் அளித்தார்.அவர் கூறியதாவது:கடந்த 2012ல் தி.மு.க., ஆட்சியில், தமிழக மீனவர்கள் கஞ்சா கடத்தியதாக, இலங்கை அரசு பொய் வழக்கு பதிந்து அவர்களை சிறையில் அடைத்தது. கடந்த 2014ல் இலங்கை நீதிமன்றத்தில் அவர்களுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது, தமிழக பா.ஜ., தலைவராக இருந்தேன். மீனவர்களுக்காக, உடனே டில்லி சென்று, பிரதமர் மோடியிடம் நேரடியாக விபரங்களை தெரிவித்தேன். இதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். தமிழகத்தில் உள்ள மீனவ மக்களின் சகோதரியாக, அன்று வெற்றியடைந்தேன்.தமிழக முதல்வர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்தபோது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, 2022, ஜன., 9ல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.இலங்கை சிறையில் உள்ள தமிழகம், காரைக்கால் மீனவர்களை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வெற்றி பெற்றேன்.இந்தியா - இலங்கை நல்லெண்ண அடிப்படையில், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.கவர்னராக இருந்த புதுச்சேரி மாநில மீனவர்களுக்கு, பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி மீன்பிடி தடைக்காலம் நிவாரணத் தொகை 5,500 ரூபாயில் இருந்து 6,500 ரூபாயாக பெற்று கொடுத்தேன்.மழைக்கால விடுமுறை நிவாரணத்தொகை 2,500 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக பெற்று கொடுத்தேன்.மீன்பிடி தடைக்காலத்தில் படகுகள் சீரமைப்பு உதவித்தொகை பெரிய படகிற்கு 25,000 ரூபாயில் இருந்து 35,000 ரூபாயாகவும், சிறிய பைபர் படகிற்கு 10,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாகவும் வழங்கினேன்.நான் மீனவர்களுக்காக, மத்திய அரசிடம் இருந்து பல்வேறு உதவிகளை பெற்று மீனவ மக்களுடன் ஒரு சகோதரியாக இருந்து வருகிறேன்.தென் சென்னையில் வசிக்கும் மீனவர்கள் எனக்கு வாய்ப்பளித்தால், மீனவ மக்களின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் என்றும் துணைநிற்பேன். அவர்களின் வாழ்வு தாமரைப் போல மலரும் என உறுதி அளிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.