கவுன்சிலர் உறவினரென தினம் 1,000 வசூலித்தவர் கைது
சென்னை : ஆயிரம்விளக்கு மாடல் பள்ளி சாலையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிகளை செய்து வரும் தனியார் நிறுவ பொறியாளர் ஆனந்திடம், கவுன்சிலரின் உறவினர் எனக் கூறி, வாலிபர் ஒருவர் தினமும், 1,000 ரூபாய் மாமூல் வசூலித்து வந்துள்ளார்.இது குறித்து கவுன்சிலரிடம் ஆனந்த் புகார் அளித்துள்ளார். நேற்று அந்த வாலிபர் மாமூல் வாங்க வந்தபோது கவுன்சிலரும், பொறியாளர் ஆனந்தும் பிடித்து, ஆயிரம்விளக்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த வாலிபர் திருவல்லிக்கேணி பல்லவன் சாலையைச் சேர்ந்த சின்னதம்பி, 34, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.