உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் வீடுகள் விற்பனை 12 சதவீதம் உயர்வு: கிரெடாய் தகவல்

சென்னையில் வீடுகள் விற்பனை 12 சதவீதம் உயர்வு: கிரெடாய் தகவல்

சென்னை,:'சென்னையில் ஆறு மாதங்களில் வீடுகள் விற்பனை, கடந்த ஆண்டைவிட, 12 சதவீதம் அதிகரித்துள்ளது' என, 'கிரெடாய்' அமைப்பு தெரிவித்துள்ளது.'கிரெடாய்' என்ற இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பின், சென்னை பிரிவு தலைவர் ஏ.முகமது அலி கூறியதாவது:நாடு முழுதும் ரியல் எஸ்டேட் சந்தைகள் குறித்த சமீபத்திய ஆய்வு முடிவுகள் அடிப்படையில், சென்னை மிக முக்கிய இடமாக உருவெடுத்துள்ளது. அனைத்து தரப்பினருக்குமான பாதுகாப்பை உள்ளடக்கிய வகையில், சென்னை முன்னணியில் உள்ளது.நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், சென்னையில், 7,975 வீடுகள் விற்பனையாகி உள்ளன. இது, கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் நடந்த விற்பனையை விட, 12 சதவீதம் அதிகம். இதே காலகட்டத்தில், ஹைதராபாதில் 21; மும்பையில் 16 சதவீதம் என, வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளது.இந்நகரங்களுடன் ஒப்பிடுகையில், சென்னையில் வீடுகள் விற்பனை முன்னேற்ற பாதையில் செல்வது தெரிகிறது. சென்னையில் புதிய திட்டங்களை அறிவிப்பதில், கட்டுமான நிறுவனங்களின் புதிய யுத்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில், தென் சென்னை, மேற்கு சென்னை பகுதிகளில், புதிய திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையில், 1 கோடி ரூபாய்க்கு மேல் விலை உள்ள வீடுகளை வாங்குவதில், மக்கள் ஆர்வம் காட்டுவது அதிகரித்துள்ளது. கடந்த மூன்று காலாண்டுகளில் நடந்த விற்பனை அடிப்படையில், இந்த விபரம் தெரியவந்துள்ளது. நடப்பாண்டு முதல் ஆறு மாதங்களில் நிலத்தின் விலை, 5 சதவீதம் உயர்ந்த போதும், வீடுகள் விற்பனையில் இதன் தாக்கம் தெரியவில்லை. குறிப்பாக, முகப்பேர், அண்ணா நகர், பெரம்பூர் பகுதிகளில், சொத்துக்களின் மதிப்பு உயர்ந்து, சந்தை நிலவரத்தில் உறுதி தன்மையை ஏற்படுத்தி உள்ளது. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்ட பணிகள், சாலை விரிவாக்க திட்டங்கள், உட்கட்டமைப்பு திட்டங்கள் போன்றவை, ரியல் எஸ்டேட் துறைக்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. ஐ.டி., - ஆட்டோ மொபைல், உற்பத்தி சார்ந்த தொழில் துறை வளர்ச்சியால், வீடு வாங்குவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சென்னையில் நிலத்தின் விலை, நடப்பு ஆண்டில், 5 முதல் 7 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வீடுகள் விலை நிலையாக இருக்கும் என்று தெரிகிறது. மலிவு விலை வீடுகள் அதிகரிப்பில், அரசின் முயற்சிகள், பணிபுரியும் மகளிருக்கு பாதுகாப்பான சூழல் உள்ளிட்டவை, சென்னை ரியல் எஸ்டேட் சந்தை மேம்பாட்டுக்கான காரணிகளாக அமைந்து உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை