உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செங்கை முதல்வர் கோப்பை செஸ் 130 கல்லுாரி மாணவர்கள் அசத்தல்

செங்கை முதல்வர் கோப்பை செஸ் 130 கல்லுாரி மாணவர்கள் அசத்தல்

சென்னை ; செங்கல்பட்டு மாவட்டம், முதல்வர் கோப்பை செஸ் போட்டியில், 130 கல்லுாரி மாணவ - மாணவியர் உற்சாகமாக பங்கேற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், அந்தந்த மாவட்டத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. பள்ளி, கல்லுாரி, பொது, மாற்றுத்திறனாளி, அரசு ஊழியர்கள் என, ஐந்து பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், கல்லுாரி பிரிவினருக்கான செஸ் போட்டி, மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலையில் நேற்று நடந்தது. மாவட்டத்திற்கு உட்பட பல கல்லுாரிகளில் இருந்து, 130 மாணவ - மாணவியர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு ஏழு சுற்றுகள், மாணவியருக்கு ஐந்து சுற்றுகள் அடிப்படையில் போட்டிகள் நடந்தன. மாணவியர் பிரிவில், 5 / 5 என்ற புள்ளிக் கணக்கில், குரோம்பேட்டை எஸ்.டி.என்.பி., வைஷ்ணவா கல்லுாரி மாணவி அவந்திகா, முதலிடத்தை கைப்பற்றினார். அவரை தொடர்ந்து, ஓ.எம்.ஆர்., படூர் ஆனந்த் பொறியியல் கல்லுாரியின் கனிஷ்கா, பெருங்குடி அம்பேத்கர் சட்டக் கல்லுாரியின் மாணவி கோட்டை காளி ஆகியோர் தலா நான்கு புள்ளிகள் பெற்று, முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை வென்றனர். மாணவர்களில் மேலக்கோட்டையூர், வி.ஐ.டி., கல்லுாரியின் நிஷாந்த், எஸ்.ஆர்.எம்., கல்லுாரியின் மணீஷ், தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலையின் வெற்றிவேல் ஆகியோர் முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர். முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இரு பிரிவிலும் முதலிடங்களை பிடித்த மாணவ - மாணவியர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை