சென்னை பொங்கல் பண்டிகை விடுமுறை, வார இறுதி நாட்கள் என, தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையின் சுற்றுலா தலங்களான மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் ஏராளமானோர் குவிவர்.எனவே, பாதுகாப்பு கருதி மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் தடுப்பு அமைக்கப்பட்டு, யாரும் கடலில் இறங்கி குளிக்கதாவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.அதேபோல, போலீஸ் துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள் இருவர் மற்றும் ஐந்து இன்ஸ்பெக்டர்கள், சப் - இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என, 2000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.மேலும் 'ட்ரோன்' வைத்தும் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர். ஆவடியில் 3,000
பொங்கல் பண்டிகையை கொண்டாட, சென்னையின் பல பகுதிகளில் இருந்தும், சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக, அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. பயணியரின் பாதுகாப்பிற்காக, சிறப்பு பேருந்து நிலையங்கள், போலீசாரின் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.வரும், நான்கு நாட்களுக்கு, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனரக எல்லைக்குள், 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மக்கள், பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு, பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்றார்.
ஞாயிறு அட்டவணையில் ரயில்கள்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, 15, 16, 17ம் தேதிகளில், ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதன்படி, மேற்கண்ட நாட்களில் காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.இதில், காலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மற்றும் இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மதியம் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சென்னை புறநகர் பகுதிகளில் தினமும் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், ஞாயிறு மற்றும் பண்டிகையையொட்டி வரும் தேசிய விடுமுறை நாட்களில், வழக்கமாக 40 சதவீத ரயில்கள் குறைத்து இயக்கப்படும்.அந்த வகையில், வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகை தேசிய விடுமுறை என்பதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்ட்ரல் - அரக்கோணம், சூலுார்பேட்டை, வேளச்சேரி என அனைத்து மின்சார ரயில் தடத்திலும், ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும். இதேபோல், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களும், வரும் 15ம் தேதி காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மட்டுமே செயல்படும் என சென்னை ரயில்வே கோட்டம் நேற்று தெரிவித்துள்ளது.
விற்பனை 'ஜோர்'
கோயம்பேடு சந்தையில் சுமார் 7.5 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு பொங்கல் சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு 15 கரும்புகள் ஒரு கட்டு, 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மஞ்சள் கொத்து 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல முருங்கைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 110 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளன.ஒரு கிலோ மல்லி - 3,000; ஐஸ் மல்லி - 2,400; காட்டுமல்லி - 1,000; ஜாதி மல்லி - 2,500; முல்லை - 1,500; சாமந்தி - 100; சம்பங்கி - 120க்கும் விற்கப்படுகின்றன.கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு வரும் 17ம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பூ மற்றும் பழம் மார்க்கெட்டுகள் வழக்கம் போல் இயங்கும் என, நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.