வடக்கு கடற்கரை: நீதிமன்றம் அருகே, இரு தரப்பு மோதலில் கத்தியால் தாக்கிக்கொண்டோரில் நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். அதில் ஒருவர் தப்பியோட முயன்று விழுந்ததில், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை, கைலாச தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன், 31. அவரது கூட்டாளிகள் யுவராஜ், 26, லோகேஷ், 30, விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்திக், 28, பிரபாகரன், 31, வெங்கடேசன் 29. ஆறு பேரும், 2017ல் ஜீவா என்பவரை கொலை செய்த வழக்கு விசாரணைக்காக, பாரிமுனை, ராஜாஜி சாலையில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் ஆஜராகினர். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அவர்களை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஜான்சன், 29, ஆகாஷ், 21, மற்றும் அவரது கூட்டாளிகள் கத்தியால் தாக்கினர்; பதிலுக்கு எதிர் தரப்பினரும் தாக்கினர். வடக்கு கடற்கரை போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிந்தனர். விசாரணையில், ஜான்சன், தன் மாமா ஜீவாவின் கொலைக்கு பலி வாங்க, நீதிமன்றம் அருகே கொலை வெறி தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, இரு தரப்பிலும் ஆகாஷ், லோகேஷ், கார்த்திக், பிரபாகரன் உட்பட நால்வரை, நேற்று கைது செய்தனர். அதில், ஆகாசை கைது செய்ய முயலும்போது, தப்ப முயன்று விழுந்ததில், அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வழக்கில் தலைமறைவாக உள்ள ஜான்சன், தீனா உட்பட ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.