வாலிபர் சாவில் துப்பு துலங்கியது மதுபோதையில் கொன்றவர் சிக்கினார்
சென்னை: வாலிபரின் சாவில் துப்பு துலங்கியது, மதுவிற்காக திடீரென உருவான நண்பரே போதையில் தீர்த்துக்கட்டியது தெரிய வந்தது. ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொருவரை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 1ம் தேதி கடற்கரை - பூங்கா ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் அருகே வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்து, ரயில்வே போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ரயி லில் அடிப்பட்டு இறந்திருக்கலாம் என நினைத்திருந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், புளியந்தோப்பு, வ.உ.சி., நகரைச் சேர்ந்த அஸ்மத் பாஷா, 38, என்பது தெரிய வந்தது. இவர், கடந்த 1-ம் தேதி இரவு, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில், மது போதையில் பயணம் செய்ததாக தெரிகிறது. அதே ரயிலில், மெரினா கடற்கரையில் குதிரை சவாரி ஓட்டும் சுரேஷ், 38, சீனிவாசன், 52, ஆகியோரும் பயணம் செய்தனர். அப்போது, அஸ்மத் பாஷாவிடம் மது பாட்டில்கள் இருப்பதை பார்த்ததும், சுரேஷ், சீனிவாசன் இருவரும் அவருடன் நட்பாக பேசியுள்ளனர். பின், மூன்று பேரும் கடற்கரை - பூங்கா ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில்வே தண்டவாளம் அருகே அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், திடீரென சுரேஷ், சீனிவாசன் ஆகியோர் சேர்ந்து, அஸ்மத்தை தாக்கி, அஸ்மத்தின் துண்டால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். தொடர்ந்து, அவருடைய மொபைல் போனையும் திருடி, அதை ரயில் நிலையத்திலேயே விற்றுவிட்டு அங்கிருந்து தப்பினர். இந்த சம்பவம் குறித்து, எழும்பூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான போலீசார், கொலையாளிகளை 'சிசிடிவி' கேமரா உதவியுடன் தேடி வந்தனர். இதற்கிடையே, கல்லறை சாலையில் பதுங்கியிருந்த சுரேஷை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மற்றொரு குற்றவாளியான சீனிவாசனை தேடி வருகின்றனர்.