உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு கல்லுாரிக்கு புதிய கட்டடம் லோக்சபா தேர்தலால் சாத்தியமானது

அரசு கல்லுாரிக்கு புதிய கட்டடம் லோக்சபா தேர்தலால் சாத்தியமானது

திருவொற்றியூர்:திருவொற்றியூரில், சென்னை பல்கலை உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்கப்படும் என, 2012ல், 110விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேரடி, பூந்தோட்டப் பள்ளி வளாகத்தில், பி.காம், பி.சி.ஏ., பி.ஏ., உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில், 1,000த்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருடன், துவக்கப்பள்ளி கட்டடத்தில், தற்காலிகமாக கல்லுாரி வகுப்புகள் துவங்கின.இடப்பற்றாக்குறை காரணமாக, காலை - மாலை என, இரு நேரங்களில் வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும், கழிப்பறை, குடிநீர், விளையாட்டு திடல், ஆய்வகம் போன்ற வசதிகள் இல்லாமல், மாணவர்கள் தவித்து வருகின்றனர்.இதன் காரணமாக, கல்லுாரி புதிய கட்டடம் கட்டப்பட வேண்டும் என, மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.அதற்குள், 12 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆண்டொன்றுக்கு, 300 மாணவர்கள் வீதம், ஒன்பது ஆண்டுகளில், 2,700 பட்டதாரிகள், இக்கல்லுாரியில் இருந்து வெளியேறி விட்டனர். இதற்கிடையில், லோக்சபா தேர்தல் அறிவிப்பு காரணமாக, நேற்று காலை, அரசுக்கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்ட, திருவொற்றியூர் புது பேருந்து நிலையம் அருகேயுள்ள, ரீட் கூட்டுறவு இடத்தில், பூமி பூஜை போடப்பட்டது. ஐந்தாவது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம் தலைமையில் நடந்த விழாவில், எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், கல்லுாரி முதல்வர் விஜயா, பேராசிரியர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்று, அடிக்கல் நாட்டினர். அதன்படி, 2.18 ஏக்கர் பரப்பளவில், 16 கோடி ரூபாய் மதிப்பில், 18 வகுப்பறைகளுடன் கூடிய கல்லுாரி கட்டடம் கட்டப் பட உள்ளது. அதேபோல், எண்ணுார், கத்திவாக்கம் பஜாரில், 1 கோடி ரூபாய் மதிப்பில், ஆரம்ப சுகாதார மையம்; எண்ணுார் பேருந்து நிலையத்தில், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியான, 2 கோடி ரூபாய்; நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 1.5-0 கோடி ரூபாய் என, 3.50 கோடி ரூபாய் செலவில், மேற்கூரை, நடத்துனர், ஓட்டுனர் ஓய்வறை, ஒப்பனையறை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர் தனியரசு, கவுன்சிலர் கோமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை