அவசரகதியில் திறந்த குளம் ரூ.40 லட்சம் வீணான அவலம்
பூந்தமல்லி,:பூந்தமல்லி நகராட்சியில், குமணன்சாவடியில் குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி ஆக்கிரமிப்பு கட்டங்கள் உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை துார்வாரி, சுற்றிலும் நடைபாதை பூங்கா அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்தினர், 49 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த குளத்தை துார் வாரி சீரமைக்கும் பணியை, கடந்த ஜனவரியில் துவங்கினர்.குளத்தை ஆழப்படுத்தி மூன்று பகுதியில் நடைபாதை, இருக்கைகள், மின்விளக்குகள், அழகு செடிகளை அமைத்தனர். ஆனால், ஒருபுறத்தில் நடைபாதை அமைக்கவில்லை; ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானதால், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன், அரைகுறை பணிகளுடன் அவசர அவசரமாக இந்த குளத்தை, நகராட்சி நிர்வாகத்தினர் திறந்தனர்.பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி, இந்த குளத்தை திறந்து வைத்தார். அதன் பின், குளத்தின் சீரமைப்பு பணிகள் அரைகுறையாக விடப்பட்டு உள்ளன.இதுகுறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:குளத்தை சுற்றி நடைபயிற்சி செல்ல ஒரு பகுதியில் நடைபாதை இல்லாததால், இந்த குளத்தை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், குளக்கரை புதர் மண்டி வீணாகிறது. இதனால், 49 லட்சம் ரூபாய் அரசு நிதி வீணடிக்கப்பட்டு உள்ளது. குளம் சீரமைப்பு என்ற பெயரில் நிதி கையாடல் நடைபெற்றுள்ளது. இந்த குளத்தின் நான்கு புறமும் உள்ள ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றி, கிடப்பில் போடப்பட்ட பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.