சென்னையில் ஆட்டோ ஸ்டிரைக் மூன்று இடங்களில் போராட்டம்
சென்னை, ஆட்டோ கட்டணம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆட்டோ தொழிற்சங்கங்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. சென்னையில் நடந்த போராட்டத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.தமிழகத்தில் ஓடும் 3.30 லட்சம் ஆட்டோக்களுக்கு, 2013ம் ஆண்டு 1.8 கி.மீ துாரத்திற்கு 25 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா 12 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் கட்டணம் மாற்றியமைக்கவில்லை. பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய போதிலும், இதுவரையில் தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.இதற்கிடையே, ஆட்டோக்கான கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், ஆட்டோக்காக புதிய செயலி துவங்க வேண்டும், ஆட்டோக்களில் கியூ.ஆர்., கோடு ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., உட்பட 13க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நேற்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை அண்ணாசாலையில் தாராப்பூர் டவர் எதிரில் நடந்த கண்டன போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆட்டோ கட்டணம் உயர்வு, பைக் டாக்சிகளுக்கு தடையை வலியுறுத்தி பாதாகைகளை எழுந்தியப்படி தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால், அண்ணாசாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல், எழும்பூரிலும், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த போராட்டத்திலும் ஆட்டோ மற்றும் கால்டாக்சி ஓட்டுனர்கள் பங்கேற்றனர். நேற்று மாலை 6:00 மணிக்கு பின், அனைத்து ஆட்டோக்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டன.இருப்பினும் சென்னையில் நேற்று காலை முதல் பரவலாக ஆட்டோக்கள் இயக்கப்பட்டதால், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.தலைமை செயலகம் முற்றுகைஇது குறித்து, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும், புதிய செயலி உருவாக்கம், பைக் டாக்சிக்கு தடை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி சென்னை மற்றும் புறநகரில் நேற்று காலை முதல் மாலை 6:00 மணி வரை ஸ்டிரைக்கில் ஈடுபட்டோம். இதனால், சென்னை புறநகரில் உள்ள 1.20 லட்சம் ஆட்டோக்களில், 60 சதவீதம் ஓடவில்லை. அண்ணாசாலையில் நடந்த போராட்டத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நடப்பு சட்டசபை கூட்டத்தில் தாமதம் இன்றி, ஆட்டோ கட்டண உயர்வை அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், போக்குவரத்து துறை மானிய கோரிக்கையின்போது ஆட்டோக்களுடன் சென்று, தலைமை செயலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.***