வேளச்சேரி, வெள்ள பாதிப்பை தடுக்க 3.5 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்ட மூடு கால்வாயில், வெள்ளம் பின்னோக்கி பாய்வதால், மீண்டும் வேளச்சேரி வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. திட்டமிடலின்றி கட்டப்பட்ட இந்த மூடுகால்வாயால், 62 கோடி ரூபாய் வீணானதே மிச்சம் என, வேளச்சேரி மக்கள் குமுறுகின்றனர். வடகிழக்கு பருவமழையின்போது, சென்னையில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக வேளச்சேரி உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நீரோட்டம் தடைபட்டதால், 2002 மற்றும் 2015ல் வீடுகளின் ஒரு மாடி வரை வெள்ளத்தில் மூழ்கின. ஜெயலலிதா உத்தரவு மழையின்போது, வேளச்சேரி ஏரி உபரி நீர் கால்வாயில் செல்லும் வெள்ளம், சதுப்பு நிலத்தில் உள்வாங்காததே வெள்ள பாதிப்பிற்கு பிரதான காரணமாக இருந்தது. இதற்கு தீர்வு காண, 2005ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, வேளச்சேரி உபரி நீர் கால்வாயில் இருந்து பகிங்ஹாம் கால்வாய்க்கு, 'இணைப்பு மூடு கால்வாய்' கட்ட உத்தரவிட்டார். இதையடுத்து, உபரி நீர் கால்வாயின் விஜயநகர் சந்திப்பில் இருந்து, தரமணி நுாறடி சாலை வழியாக பகிங்ஹாம் கால்வாய் வரை, 3.5 கி.மீ., நீளத்திற்கு, 18 அடி அகலம், 7 அடி ஆழத்தில் மூடு கால்வாய் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக, 35 கோடி ரூபாய் ஒதுக்கி, 2011ல் பணிகள் துவங்கின. டி.சி.எஸ்., சந்திப்பு அருகில், பாறை இருந்ததால் பணிகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, மீண்டும் 27 கோடி ரூபாய் ஒதுக்கி மேற்கொள்ளப்பட்ட பணிகள், ஆமை வேகத்தில் நடந்தன. நிலைமை தலைகீழ் இந்நிலையில், 2016ம் ஆண்டு, 'ஜீரோ பாயின்ட்' பகுதியான விஜயநகர் சந்திப்பில், இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட பூஜை போட்டதால், மூடு கால்வாய் பணி அவசரகதியில் முடிக்கப்பட்டது. வேளச்சேரி - -தரமணி சாலையின் இருபுறமும் உள்ள, 4 அடி அகல வடிகாலும், இந்த மூடு கால்வாயுடன் இணைக்கப்பட்டது. இந்த மூடுகால்வாய் வழியாக, வேளச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் வடியும் 60 சதவீத மழைநீர், பகிங்ஹாம் கால்வாயை அடைய வேண்டும். ஆனால், நிலைமை தலைகீழானது. மூடு கால்வாயில், 20 சதவீதம் வெள்ளம் மட்டும் பகிங்ஹாம் கால்வாய் சென்றது. கடந்த 2021ல், இந்த கால்வாயை மழைக்கால சிறப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அதில், வெள்ளம் பின்னோக்கி பாய்வதை கண்டறிந்து, அதன் அறிக்கையை அரசுக்கு அனுப்பினர். அதன்பின், எந்த சீரமைப்பு பணியும் மேற்கொள்ளவில்லை. இதனால், அடுத்தடுத்த பருவமழையில் வெள்ள பாதிப்புக்கு இந்த மூடு கால்வாயில் பின்னோக்கி பாயும் வெள்ளம், முக்கிய காரணமாக உள்ளது. 'வெள்ளச்சேரி' இது குறித்து, வேளச்சேரி, நலச்சங்க நிர்வாகி குமாரராஜா கூறியதாவது: எந்த நோக்கத்திற்காக மூடு கால்வாய் கட்டப்பட்டதோ, அது நிறைவேறவில்லை. மக்கள் வரிப்பணித்தில், 62 கோடி ரூபாய் வீணடித்ததை தவிர, வேறு எதுவும் நடக்கவில்லை. தற்போது, உட்புற சாலைகளில் அதிக எண்ணிக்கையில் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால், வரும் பருவமழைக்கும், வேளச்சேரி என்பது வெள்ளச்சேரியாக மாறுவது நிச்சயம். இவ்வாறு அவர்கள் கூறினர். கால்வாயின் நிலவரம் என்ன? * வேளச்சேரி விரைவு சாலை மற்றும் தண்டீஸ்வரம் சாலை சந்திக்கும், ‛ஜீரோ பாயின்ட்' இடத்தில், 150 அடி துாரத்தில், இணைப்பு மூடு கால்வாயின் குறுக்கே, குடிநீர் மற்றும் கழிவுநீருக்கான, ஏழு குழாய்கள் செல்கின்றன. இதில், குப்பை, மண் எளிதாக அடைப்பதால், கால்வாயில் மழைநீர் செல்வது தடைபடுகிறது. * டி.சி.எஸ்., சந்திப்பில் பாறையை நீரோட்டம் பார்த்து தகர்க்காததால், அங்கு மேடாகவும், விஜயநகர் சந்திப்பை நோக்கிய கால்வாய் பள்ளமாகவும் இருப்பதால், வெள்ளம் பின்னோக்கி பாய்கிறது. அந்த வகையில், 1.5 கி.மீ., நீள மூடு கால்வாயில், மழைநீர் பின்னோக்கி பாய்ந்து வீராங்கால் கால்வாய்க்கு செல்கிறது. * பகிங்ஹாம் கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டோடும்போது, மூடு கால்வாய் தண்ணீர் உள்வாங்குவதில்லை. * துார் வாரும் வகையில், 3.5 கி.மீ., துார மூடு கால்வாயில், 100 அடி இடைவெளியில், 5 முதல் 10 அடி அகலத்தில், ‛சிலாப்' போட்டிருக்க வேண்டும். அதுபோன்று கட்டமைப்பு இல்லாததும் சிக்கலில் உள்ளது. *மழைநீர் பின்னோக்கி பாய்வதை பார்க்க, 2021ம் ஆண்டு, ‛ஜீரோ பாயின்ட்' இடத்தில் கால்வாயை தகர்த்து, 3 அடி அகலம், 10 அடி நீளத்தில், இரும்பு வலை அமைக்கப்பட்டது. அதுவும் தார்ச்சாலை போட்டு மூடப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட கால்வாய்!
நெடுஞ்சாலைத்துறையின் சாலை வழியாக செல்லும் மூடு கால்வாய், 2016ம் ஆண்டு பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கிருஷ்ணா குடிநீர் திட்ட பிரிவு சார்பில் கட்டப்பட்டது. திட்ட பணியை முடித்தபின், பராமரிப்பு பிரிவு வசம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், ஒன்பது ஆண்டுகள் கடந்தும், இதுவரை யார் வசமும் ஒப்படைக்கவில்லை. கிருஷ்ணா குடிநீர் திட்ட பிரிவும் பராமரிக்கவில்லை. உயர் அதிகாரிகள் தலையிட்டு, 3.5 கி.மீ., துாரம் கொண்ட மூடு கால்வாயை, பராமரிப்பு பிரிவு வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - வேளச்சேரி பகுதி மக்கள். வீராங்கால் கால்வாய் நீர்வளத்துறை வசம் உள்ளது. பராமரிப்புக்காக மாநகராட்சி வசம் ஒப்படைத்துள்ளோம். அதில் இருந்து துவங்கும், இணைப்பு மூடு கால்வாயை, கிருஷ்ணா குடிநீர் திட்ட பிரிவு கட்டியது. கட்டி முடித்தபின், அவர்கள் நீர்வளத்துறை வசம் ஒப்படைக்கவில்லை. முறையாக ஒப்படைத்திருந்தால், மாநகராட்சியிடம் ஒப்படைத்து பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை நீர்வளத்துறை மேற்கொண்டிருக்கும். உயர் அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். - நீர்வளத்துறை அதிகாரிகள்.