பெங்களூரு சிட்டி பல்கலை அணி தென் மண்டல ஹாக்கியில் சாம்பியன்
சென்னை:காட்டாங்கொளத்துாரில் நடந்த தென்மண்டல ஹாக்கி போட்டியில், பெங்களூரு சிட்டி பல்கலை முதலிடத்தையும், சென்னை எஸ்.ஆர்.எம்., இரண்டாமிடத்தையும் பிடித்தன.சென்னை பல்கலையின் தென் மண்டல ஆடவர் ஹாக்கி போட்டி, எஸ்.ஆர்.எம்., கலை கல்லுாரி ஆதரவில், காட்டாங்கொளத்துாரில் உள்ள பல்கலை வளாகத்தில், கடந்த நான்கு நாட்களாக நடந்தன. போட்டியில், தென் மாநில அளவில், 68 பல்கலை அணிகள் பங்கேற்றன.போட்டிகள், 'நாக் - அவுட்' மற்றும் 'லீக்' முறையில் நடத்தப்பட்டன. கடைசி 'லீக்' ஆட்டங்களில் பெங்களூரு சிட்டி பல்கலை 1 - 0 என்ற கோல் கணக்கில், பெங்களூரு பல்கலையை தோற்கடித்தது.மற்றொரு லீக்கில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை, 1 - 0 என்ற கோல் கணக்கில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையை வீழ்த்தியது.மூன்றாவது லீக்கில், பெங்களூரு சிட்டி பல்கலை, 5 - 2 கணக்கில், தமிழகத்தின் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இறுதி லீக்கில், எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் பெங்களூரு பல்கலைகளுக்கு இடையிலான ஆட்டம், 1 - 1 என்ற கணக்கில் 'டிரா'வில் முடிந்தது.அனைத்து லீக் ஆட்டங்கள் முடிவில், கர்நாடகாவின் பெங்களூரு சிட்டி பல்கலை முதலிடத்தையும், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை இரண்டாம் இடத்தையும் பிடித்தன. தொடர்ந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, கர்நாடகாவின் பெங்களூரு பல்கலை முறையே, மூன்று மற்றும் நான்காம் இடங்களை கைப்பற்றின.