உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையை மிரள வைத்த பைக் ரோமியோக்கள் ...அட்டகாசம்!:திணறிப்போன போலீசார்; 24 பைக்குகள் பறிமுதல்

சென்னையை மிரள வைத்த பைக் ரோமியோக்கள் ...அட்டகாசம்!:திணறிப்போன போலீசார்; 24 பைக்குகள் பறிமுதல்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 'பைக் ரேஸ்' ரோமியோக்கள் நேற்று முன்தினம் இரவு, சென்னை மற்றும் புறநகர் பகுதி சாலைகளில் அட்டகாசம் செய்து, மற்ற வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் மிரள வைத்தனர். இந்த கும்பலின் அட்டகாசத்தை தடுக்க முடியாமல், போலீசார் திணறிப் போயினர். இந்த கும்பலின் அட்டகாசத்தால் விபத்துகளும் அரங்கேறின. மக்களை மிரள வைத்த கும்பலிடம் இருந்து, 24 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Gallery சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை, கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதே வேளையில், 'பைக் ரேஸ்' ரோமியோக்கள், சென்னை அண்ணா சாலை, பல்லவன் சாலை, மூலக்கடை, மாதவரம் உள்ளிட்ட பல இடங்களில், பைக் பந்தயத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பாவி மக்கள் மட்டுமின்றி, பைக் பந்தயத்தில் பங்கேற்ற இளைஞர்களும் விபத்தில் சிக்கினர். குறிப்பாக, மூலக்கடையில் இருந்து மாதவரம் நோக்கி செல்லும் ஜி.என்.டி., சாலையில் நேற்று அதிகாலை, 1:00 மணியளவில், செயின்ட் ஆன்னிஸ் மகளிர் கல்லுாரி அருகே தடுப்புகளை தாண்டி, 20க்கும் மேற்பட்ட ரோமியோக்கள் பைக்குகளில் சீறிப்பாய்ந்தனர். பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை பற்றியோ, போக்குவரத்து போலீசாரை பற்றியோ அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதில், ஜி.என்.டி., சாலையில், 'டிஎன் 05சி ஆர் 6529' என்ற பதிவெண் உடைய ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த 'ராபிடோ' இருசக்கர வாகனத்தின் மீது பைக் மோதியது. இதில், ஓட்டுநருடன் சென்ற வாலிபரும் கீழே விழுந்து, கை மற்றும் கால்களில் காயமடைந்தார். ராபிடோ ஓட்டுநர் சென்ற ஸ்கூட்டர், சாலையில் சில அடி துாரம் இழுத்துச் செல்லப்பட்டது. பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரும் விழுந்தார். உடனே, அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த போலீசார், வாலிபரை விரட்டிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில், பிடிபட்டவர் திரு.வி.க., நகரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பது தெரிய வந்தது. அவர், போலீசாரிடம் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சினார். இதற்கிடையே ஸ்கூட்டரில் வந்து காயமடைந்த இருவரும், அங்கிருந்து வீட்டுக்கு சென்றனர். நேற்று மருத்துவ சிகிச்சை பெற்றனர். பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர்கள் குறித்து, மாதவரம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் தாத்தா

அதேபோல், மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் வாலிபர் ஒருவர், கிறிஸ்துமஸ் தாத்தா உடை அணிந்து, நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தார். அருகில் செல்லக்கூடிய பிற வாகனங்கள் மீது மோதுவது போல் சென்று அச்சுறுத்தி, 'கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்' என்று கூறி, அட்ராசிட்டி செய்தார். இந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இவர் யார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர். அண்ணாசாலை காவல் நிலையம் எதிரே, ஸ்பென்சர் பகுதி, பல்லவன் சாலையிலும், பைக் ரோமியோக்கள் இரவில் சீறிப்பாய்ந்தனர். வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அவர்களை பிடிக்க முடியாமல் விட்டனர். இதுபோன்று பல்வேறு இடங்களில், பைக் ரோமியோக்களின் அட்டகாசத்தால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு சென்று திரும்பிய பலரும் மிரளும் நிலை ஏற்பட்டது. சென்னையில் குறைந்திருந்த பைக் ரோமியோக்களின் அட்டகாசம் மீண்டும் அதிகரித்து விட்டதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. இரவு நேரங்களில், குறிப்பாக நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் பைக் ரோமியோக்கள் ரேசில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.

அபராதம்

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை விபத்தின்றி கொண்டாட, பைக் ரோமியோக்களை போலீசார் உடனே கட்டுப்படுத்துவது அவசியம். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சாலை விதிமுறைகளை மீறுவோர் மட்டுமின்றி, பைக் ரேஸ், அதிவேகமாக வாகனம் ஓட்டுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, ஏற்கனவே எச்சரிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், பண்டிகையை காரணம் காட்டி, சிலர் வாகனங்களை அதிவேகமாக ஓட்டி வந்தனர். சென்னை முழுதும் வெவ்வேறு இடங்களில், அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டிய, 24 பேரின் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம். அவர்களுக்கு தலா 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக வாகனம் ஓட்டியது தொடர்பாக, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, சம்பந்தப்பட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை