| ADDED : ஜன 25, 2024 12:19 AM
சென்னை, தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம். தை பூசத்தை முன்னிட்டு சென்னை, புறநகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் தெப்ப உற்சவம் நடத்தப்படுகிறது.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், தெப்ப உற்சவம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தினமும் இரவு 7:00 மணிக்கு நடக்கிறது.இதில், முதல் நாள் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர், இரண்டு, மூன்றாம் நாள் சிங்காரவேலர் தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலிக்கின்றனர்.மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், நேற்று முதல் மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் நடக்கிறது. முதல் நாளான நேற்று மாலை வெள்ளீஸ்வரர், காமாட்சி அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இதைத்தொடர்ந்து யானை வாகனத்தில் காமாட்சியம்மன் வீதிஉலா வந்து அருள்பாலித்தார். இன்று வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், காமாட்சியம்மன் தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலிக்கின்றனர். இதை தொடர்ந்து, அம்மன் கிளி வாகன புறப்பாடு நடக்கிறது.நாளை வைகுண்டப் பெருமாள், காமாட்சியம்மன் தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலிக்கின்றனர். இரவு 8:30 மணிக்கு அன்ன வாகனத்தில் திருவீதி உலா வரும் காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவில், 'கோபதிசரஸ்' என்று குளத்தில் இன்று முதல் முதல் மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் நடக்கிறது.முதல் நாள் சந்திரசேகரரும், இரண்டாம் நாள் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியரும், மூன்றாம் நாள் ஆறுமுகப் பெருமானும் தெப்பத்தில் வலம் வந்து அருள் பாலிக்கின்றனர்.திருவொற்றியூர், தியாகராஜசுவாமி கோவிலில், நாளை தெப்பத்திருவிழா நடக்கிறது. இதில், திரிபுரசுந்தரி உடனுறை சந்திரசேகர சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி ஐந்துமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.