வடகிழக்கு பருவமழைக்கு முன் படகு வாங்கி கொள்ளுங்கள் அம்பத்துாரில் அன்புமணி கிண்டல்
அம்பத்துார், 'உரிமை மீட்க, தலைமுறை காக்க' என்கிற பெயரில் அன்புமணி, 100 நாள் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். இதில், முன்றாவது நாளான நேற்று, அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையத்தில் இருந்து அரை கி.மி., துாரம், நடைபயணம் மேற்கொண்டார். இதில், வழக்கறிஞர் பாலு, சேகர் உட்பட 400க்கும் மேற்பட்ட பா.ம.க., நிர்வாகிகள் பங்கேற்றனர். பின், அன்புமணி பேசியதாவது: சிறுமியர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்; பெண்களுக்கு எங்கேயும் பாதுகாப்பில்லை. இதற்கு காரணம் தி.மு.க.,வும், முதல்வர் ஸ்டாலினும் தான். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கோழை தி.மு.க.,விற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தைரியமில்லை. இது ஜாதி பிரச்னை இல்லை. வேலைவாய்ப்பு, படிப்பு, சுயமரியாதைக்கான பிரச்னை. சென்னைவாசிகளே, மூன்று மாதங்களில் வடகிழக்கு பருவமழை வந்துவிடும். அதற்கு முன், வீடு, கார், பைக் உள்ளிட்டவற்றை பாதுகாத்து கொள்ளுங்கள். நல்ல படகு ஒன்றை வாங்கி கொள்ளுங்கள். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட, யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்கிற எண்ணம் உங்களுக்குள் ஆழமாக வரவேண்டும். அப்போதுதான் உங்களுக்கு விடுதலை கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். போதை பொருள் கிடைப்பதில் அமெரிக்காவை முந்தியது தமிழகம் அம்பத்துாரை தொடர்ந்து, மதுரவாயல் அடுத்த வானகரம் பகுதியில் அன்புமணி நடைபயணம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது: நான் படித்த காலத்தில் பள்ளி முன் இனிப்பு வகைகள் கிடைத்தன. தற்போது கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கிடைக்கின்றன. மதுவிலக்கு கொண்டு வருவதாக கூறிய தி.மு.க., ஆட்சியில் 'டாஸ்மாக்' கடைகள் அதிகரித்துள்ளன. போதை பொருட்கள் எல்லா இடங்களிலும் சர்வசாதாரணமாக கிடைக்கிறது. போதை பொருட்கள் புழக்கத்தில், அமெரிக்காவை தமிழகம் பின்னுக்கு தள்ளியுள்ளது. தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உங்கள் பிள்ளைகளை மறந்து விடுங்கள். போதைப் பொருட்களை விற்பனை செய்வதே தி.மு.க.,வினர் தான். நான் ஆட்சிக்கு வந்தால் ஆறு மாத ஆட்சியில் ஆறே நாட்களில், போதை பொருட்கள் இல்லாமல் செய்து விடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.