கதீட்ரல் சாலை பூங்கா இன்று திறப்பு தோட்டக்கலை துறை தகவல்
சென்னை:சென்னை கதீட்ரல் சாலையில், 6 ஏக்கரில் அமைக்கப்பட்ட கருணாநிதி நுாற்றாண்டு பூங்கா, இன்று திறக்கப்படுகிறது.தோட்டக்கலை துறைக்குச் சொந்தமாக கதீட்ரல் சாலை, அண்ணா மேம்பாலம் அருகிலுள்ள நிலம், தனியாரின் ஆக்கிரமிப்பில் இருந்து, சில ஆண்டுகளுக்கு முன் மீட்கப்பட்டது.இங்கு தோட்டக்கலை துறை சார்பில் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, தோட்டக்கலை துறை சார்பில் இங்கு, 6 ஏக்கர் நிலத்தில், 45 கோடி ரூபாய் செலவில், பல்வேறு சிறப்பு வசதிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.இயற்கை சூழலுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில், தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் ஜீப் லைன், 2,600 சதுர அடியில் ஆர்கிட் குடில், 10,000 சதுர அடி பரப்பில் கண்ணாடி மாளிகை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வெளிநாட்டு பறவைகளை மக்கள் பார்த்து ரசிப்பதற்கான சிறப்பு மையம், 23 அலங்கார வளைவு, கூழாங்கல் பாதை, இசை நீரூற்று, பாரம்பரிய காய்கறி தோட்டம், சிற்றுண்டியகம் என, பல்வேறு வசதிகளுடன், இந்த பூங்கா போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதற்கான கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், இப்பூங்காவை முதல்வர் ஸ்டாலின், இன்று திறந்து வைக்கிறார். பூங்காவை பார்வையிட பெரியவர்களுக்கு, 100 ரூபாய், சிறியவர்களுக்கு, 50 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, சிறப்பு வசதிகளை கண்டுகளிக்க, தனித்தனி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்படி ஜீப்லைனில் பயணிக்க, பெரியவர்களுக்கு 250 ரூபாய், சிறியவர்களுக்கு 200 ரூபாய், குழந்தைகளுக்கு 150 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று பறவையகம், இசை நீரூற்று, குழந்தைகளுக்கான சவாரி ஆகியவற்றுக்கும், தனித்தனி கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கட்டணங்கள் குறித்த முழு விபரங்கள், சிறப்பு வசதிகள், நுழைவு சீட்டு பெறுதல் ஆகிய விபரங்களை, tnhorticulture.in/kcpetickets என்ற இணையதளம் வாயிலாக மக்கள் அறியலாம்.