சீர்காழியில் விபத்தில் சிக்கிய சென்னை பைக் திருடன்
வளசரவாக்கம், அபோரூர் காரம்பாக்கம் அருணாச்சலம் நகரைச் சேர்ந்தவர் ரமணேஷ், 19; தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவரது 'ஹீரோ பேஷன் ப்ரோ' பைக்கை கடந்த 27ம் தேதி, இவருக்கு பழக்கமான போரூர், காரம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய், 22, என்பவர், பிளேடை காட்டி மிரட்டி பறித்துச் சென்றார். இதுகுறித்து புகாரின்படி, வளசரவாக்கம் போலீசார் சஞ்சயை தேடினர். அவர் சீர்காழியில் இருப்பதாக, தகவல் கிடைத்தது. மேலும் விசாரணையில், 'பைக்'குடன் புதுச்சேரி சென்ற சஞ்சய், அங்கு மது அருந்தி விட்டு, எங்கு செல்வது என தெரியாமல் சீர்காழி சென்றுள்ளார். அங்கு விபத்தில் சிக்கி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரிந்தது.இதையடுத்து அவரை, வளசரவாக்கம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.